பக்கம் : 1 | | உ இறைவன் துணை | சூளாமணி | பாயிரம் | கடவுள் வாழ்த்து | 1. | வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும் சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார். | (இதன் பொருள்) வினையின் தொகை ஆய வென்றான் - காதி, அகாதி என்னும் வினைத் தொகுதிகளை முழுதும் வென்றுயர்ந்தோனும்; தன்கண் விரிந்து ஒன்று ஆய்ப் பரந்த உணர்வின் ஒழியாது - தன் திருவுள்ளத்திலேயே தோன்றிப் பெருகி ஒப்பற்றதாகி விரிந்த கேவலஞானத் தினின்றும் எஞ்ஞான்றும் பிரியாமல்; முற்றும் சென்றான் - உலகமூன்றனையும் எஞ்சாது ஒருங்கே உணர்கின்றவனும்; திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தியாகி நின்றான் - விளங்கா நின்ற ஒளிவட்டம் சூழ்தற்குக் காரணமான ஒளிவடிவம் உடையவனாய் நிலைபெற்றவனும் (ஆகிய அருகக் கடவுளினது), அடிக்கீழ்ப்பணிந்தார் - திருவடிகளில் வீழ்ந்து வணங்கினவரே; வினை நீங்கி நின்றார் - பிறப்பிற்குக் காரணமான இருள்சேர் இருவினையும் நீங்கப்பட்டு வீட்டின்கண் நிலைத்து நிற்கின்றவர் ஆவர், (எ - று.) எனவே யாமும் அப்பெருமானுடைய திருவடிகளை வணங்கி வினைத் தொடர்பின் நீங்கி உய்வோமாக என்பது குறிப்பாயிற்று. வினை என்றது ஞானாவரணீயம் முதலிய எண்வகைக் கன்மங்களை யும், அவைதாம் காதி, அகாதி என இருவகைப்பட்டு நிற்றலின் தொகையாய எனப் பன்மையாகக் கூறினர். ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகனீயம், அந்தராயம் என்னும் நான்கும் காதி வினை எனப்பட்டு ஒரு தொகையாம்; வேதனீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம் என்னும் நான்கும் அகாதிவினை எனப்பட்டு ஒரு தொகையாம் என்க. | | |
|
|