சூளாமணியின் கதைச் சுருக்கம்

இனி, இச்சூளாமணி நுவலும் கதையினை ஒருசிறிது காண்போம்
இந்நாவலந்தண்பொழிலிலே சுரமைநாடு என்று ஓர் அழகிய நாடுளது. அந்நாடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வளத்தானும் சிறப்புடையதாம். அவ்வத்திணைக் கருப்பொருளாகிய விலங்கினங்களானும் பறவைகளானும் பல்வேறுவகைக் கூலங்களானும் வளமிக்குத் திகழ்ந்தது அந்நாடு. அத்திருநாட்டின் தலைநகராக விளங்குவது போதனமாநகரம் எனப்படும். இந்நகரம் இந்திரன் அமராவதியினும் எழில்மிக்கது. கடலாகிய பொய்கையின்கண் பூத்த தாமரையாகிய நாவலந்தீவின் பொகுட்டாகத் திகழும் சுரமைநாட்டின்கண் வாழும் திருமகள் போன்ற தோற்றமுடையது அந்நகரம்.

அந்நகரத்தை ஆளும் பயாபதி என்பவன் சிறந்த சக்கரவர்த்தியாவான். உலகினுக்கு உயிர் போன்றவன். செங்கோன்மை பிறழாதவன். இத்திருமன்னன் ஆட்சியின்கீழ்ப்பட்ட அந்நாட்டின்கண் காமவேள் செய்யுங் கலகமல்லது பகைவர் செய்யுங் கலகம் ஒருநாளும் நிகழ்ந்ததில்லை. அந்நாட்டு மக்கள் ஆறிலொன்று அரசனுக்கீவது நமக்கு அறமாம் என்று கருதி அன்புடன் வழங்கும் பொருளைப் பெறுவதல்லது அரசன் அக்குடிமக்களை நலிந்து பொருள்கொள்ளுதல் இலன். உட்பகையையும் புறப்பகையையுங் களைந்து தன்னையும் தரையையுங் காக்கும் அம்மன்னர்மன்னனுக்குத் தேவிமார் இருவருளர். அவருள் மூத்தாள் பெயர் மிகாபதி. இளையாள் சசி என்னும் பெயருடையாள். திருமகளும் கலைமகளும் போன்ற இவ்விரு தேவிமாரும் பயாபதியின் உள்ளத்தே ஒருவராய் அவனை அன்பாலே தங்கள் நெஞ்சத்தே பிணித்து வைத்துள்ளனர். இவ்வாழ்க்கைத் துணைவியரோடே பயாபதி வேந்தன் இனிது வாழ்ந்து வருங்காலத்தே தேவிமார் இருவரும் வயிறு வாய்த்தனர்.

இவர்களுள் மிகாபதிக்கு விசயன் என்பவனும், சசி என்பவளுக்குத் திவிட்டனும் மக்களாகத் தோன்றினர். இவ்விரு மக்களுள் விசயன் திங்களும் சங்கும்போல வெண்ணிற முடையன். திவிட்டனோ கடலும் முகிலும்போலக் காரொளி பெற்றுத் திகழ்ந்தான். இவர்கள் உலகில் தோன்றியபொழுது உலகில் நன்னிமித்தங்கள் பல தோன்றின. இம்மைந்தர் இருவரும் மதனனும் கலைமுருகனும் எனும்படி நாளும் நாளும் வளர்ந்து காளைப்பருவமெய்தினர். இவ்விரு மக்களும் முற்பிறப்பிலே தேவர்களாகத் தோன்றிக் கற்பலோகத்தைப் பலகாலம் ஆட்சி புரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.