இனி, இச்சேந்தனுடைய காலத்தையாதல் தோலாமொழித்
தேவர் வாழ்ந்த
காலத்தையாதல் இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை.
இச் சூளாமணிக்கு முற்பட்ட
சிந்தாமணியின் காலம் கி. பி. 897 க்குப்
பின்னதாதல் வேண்டும் என ஒருசார்
வரலாற்றாசிரியர் கூறுவர். இக்கொள்கைக்கு
அவர்கள் காட்டும் சான்றுகள் சிறப்புடையன
அல்ல. ஊகமாத்திரையே இவ்வாறு
கூறுகின்றனர் எனத் தோன்றுகிறது.
இனி, இராவ்பகதூர் எ. சக்கரவர்த்தி நயினார் எம். ஏ., ஐ. இ. எஸ்.
அவர்கள்
சிந்தாமணியின் காலத்தைப்பற்றி இங்ஙனம் கூறுகின்றார். "மதப்போராட்டம்நிகழ்ந்த
தேவாரக் காலத்தில் பெரும்பாலாரான பௌத்தரும் சமணரும் கருவறுக்கப்பட்டனர்.
எனவே, தேவாரக் காலத்துக் கபாலிகத் தலைவர்களால் இந்துமத மறுமலர்ச்சி
கொண்டுவரப்பட்டதற்கு முந்திய பகுதியையே இக்காவிய அமைப்புக்குரிய காலமாகக்
கொள்ளுவது ஒன்றே தகுதி வாய்ந்த முடிபாகும்." இப்பெரியார் கூறுமாறு போலச்
சமணசமயம் பெரிதும் அழிக்கப்பட்டுச் சமணராயிருந்த மன்னர்களும் சைவமுதலிய
வேறு
சமயங்களைத் தழுவிய தேவாரக் காலத்திற்குப் பின்னர்ச் சிந்தாமணியும்
இச்சூளாமணியும் போன்ற சமணசமயச் சார்புடைய காப்பியங்கள் தோன்றின
என்று
கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை- மேலும் இச்சூளாமணியின்கண்
கூறப்படும்
அரசியல், அமைச்சியல், துறவியல் முதலியற்றை நோக்குங்கால்
இக்காப்பி்யம்
சமணமன்னர்களும் சமணத்துறவோர்களும் செழிப்புற்றிருந்ததொரு
காலத்தேதான்
தோன்றியிருத்தல் கூடும் என்பது புலனாம். சேந்தன் முதலிய
அரசர்களும்
திருத்தக்கதேவராலும் இந்நூலாசிரியராலும் ஒருவாயாய்க் கூறப்படுகின்ற
தெருண்டார்
அவையும் நிரலே சமணசமயச் சார்புடை மன்னரும் சான்றோருமே
ஆதல் ஒருதலை.
எங்ஙனமாயினும் சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித்தேவர் பிற்காலத்தவர்
என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே தோலாமொழித்தேவர் கடைச்சங்ககாலத்திற்குப்
பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு
அணித்தாய்த்
தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர்
என்பது ஒருவாறு
பொருந்துவதாம். |