முன்கூறப்பட்ட கார்வெட்டியரசன் விசயன் என்பவனே
ஈண்டு ஆசிரியரால் சேந்தன்
என்று குறிப்பிடப்படும் வேந்தனாதலுங் கூடும்.
இச்சேந்தன் என்பான் தமிழ்மொழியின் பால்
பெரிதும் விருப்பமுடையன்
என்பதனை இப்புலவர் அவனைத் "தூமாண்டமிழின் கிழவன்"
எனச் சுட்டுதலால்
உணரலாம். சேந்தன்திவாகரம் என்று ஒரு நிகண்டின் பெயர்
கேட்கப்படுகின்றது,
எனவே தூமாண்டமிழின்கண் பேரார்வமுடைய இச்சேந்தனே
அத்திவாகரம் என்னும்
சிறந்த நூலைச் செய்வித்தவனும் ஆதல் கூடும். ஆகவே
திவாகரமும் இச்சூளாமணியும்
ஒரு காலத்தே தோன்றிய நூல்கள் என்று கருதுதல் கூடும்.
கடைச்சங்ககாலத்திற்குப்
பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச்சமயக்
கணக்கர்கள்
அச்சமயத்தை யாண்டும் பரப்புதற் பொருட்டு அதற்கு இன்றியமையாத
மொழியினை வளம்படுத்த வேண்டும் என்னும் கருத்தால் அங்கங்கே சங்கங்கள்
பல
நிறுவினர் என்றும், அச்சங்கங்களுள் தமிழகத்திலிருந்த தமிழ்ச்சங்கம்
(திரமிளசங்கம்)
மிகவும் சிறப்புற்றிருந்தது என்றும் வரலாற்று நூலாசிரியர்
கூறுகின்றனர். இத்தகைய
சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர். அச்சங்கங்களையே
திருத்தக்கமுனிவரும்
இந்நூலாசிரியராகிய தோலாமொழித்தேவரும் தெருண்டார்
அவை என்று குறிப்பிடுகின்றனர்
என்று தோன்றுகின்றது.
சூளாமணியாசிரிய ராகிய தோலாமொழித்தேவர் பாயிரத்தின்கண்
"யாமியற்றிய
இச்சூளாமணி சேந்தனுடைய அவையின்கண் ணமைந்த
சான்றோர்களால் கேட்கப்பட்டு
அவர்களால் நல்லநூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டும்
இருக்கின்றது. இனி இந்நூலைப்பற்றிக்
கல்லாமாக்கள் கூறும் குறையையாதல்
புகழினையாதல் யாம் பொருளாகக் கொள்கின்றிலேம்"
என வீறு தோன்ற
விளம்புகின்றனர். |