xLvi
என்னும் செய்யுளை யாத்து அவ்வந்தணர் கைக்கொடுத்து அவர் வறுமையைத்
தீர்த்தனர்.
தன்னடியார்க்குத் தோன்றாத் துணையாம் ஈசர்கழல் பணிந்து
இடையுள்ள தலங்களை வணங்கிக் கொண்டே கச்சிமாநகரவர் செய்தவப்
பயனாகக் காஞ்சியை அடைந்தனர் நம்மாதவப் பெருந்தகையார். அன்பர்
சிலருடன் சென்று திருவேகம்பரையும் காமாட்சியம்மையையும் நாடொறும்
வழிபட்டு வருவாராயினர்.
‘கம்பராமாயண நூலுக்கு ஒப்பதும் உயர்ந்ததும் ஆகிய நூலொன்றும்
தமிழில் இல்லை’ எனச் செருக்கிக் கூறிய வைணவர் தம் தருக்கொழிய
‘நாடிய பொருள்கை கூடும்’ என்னும் முதற் பாவிற்குக் குற்றங்கள் பல காட்டி
அவ்வைணவர்தம் குறையை நிறைவு செய்ய அக்குற்றங்களைப் பரிகரித்தனர்.
அந்நூலின் உயர்வை அறிந்து போற்றுதற்கும் உரியர் சுவாமிகள்
போல்வாரன்றித் தம்மை ஒப்பவர் அல்லர் எனப் போற்றிச் சென்றனர். அது
‘கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி’ என்னும் ஓர் சிறுநூலாய்
அமைந்தது.
திருவண்ணாமலை ஞானப்பிரகாசமுனிவர் சிவஞான சித்தியார்க்குச்
சிவசமவாதத்தைத் தழுவிய நிலையில் ஓருரை கண்டுள்ளனர். அம் மரபில்
வந்த பண்டார சந்நிதிகளில் ஒருவர் தம் சீடருள் ஒருவரைச் சிவஞான
சுவாமிகள்பால் விடுத்துச் சுவாமிகளுடைய பொழிப்புரையைப் பழிக்குமுகமாகத்
தம் கொள்கையை நிலைநிறுத்தச் சிவஞான சித்தியார் சுபக்கப் பாயிரத்துள்
வரும் ‘என்னை இப்பவத்திற் சேராவகை எடுத்து என்னும் பாவுள் ‘எடுத்து’
என்னும் சொல்லுக்குப் பொருளென்னை என வினாவுவித்தனர். இவர்
கருவியாக ஏவுவித்த பண்டார சந்நிதியின் உட் குறிப்பை உணர்ந்து எடுத்து’
என்னும் சொல்லுக்குச் சிவசமவாதவுரை மறுப்பு நூலை எழுதினார். அப்
பண்டார சந்நிதியார் மறுப்பெழுதக் கண்டு எடுத்தென்னும் சொல்லுக்கிட்ட
வைரக்குப்பாயம் என்னும் நூலை வெளியிட்டதன் மேலும் ஞானப்பிரகாசர்
உரை முழுவதும் பொருந்தாத போலியுரை என விளக்கச் சிவ சமவாதவுரை
மறுப்பு என்னும் நூலையும் இயற்றினர்.
சர்வாத்ம சம்பு சிவாசாரியார், கஞ்சனூர் அரதத்த சிவாசாரியார்,
அப்பைய தீட்சிதர் ஆக மூவரும் முறையே இயற்றியுள்ள ‘சித்தாந்தப்
பிரகாசிகை,’ ‘சுலோக பஞ்சகம்,’ ‘சிவதத்துவ விவேகம்’ என்னும் வடமொழி
நூல்களை மொழிபெயர்த் தருளிச் செய்தும் தொல்காப்பியத்தில் பாயிரம்,
முதற் சூத்திரம் ஆக இரண்டனையும் நுண்பொருள் விளங்கத் தேற்றும்
தொல்காப்பியச் சூத்திரவிருத்தி இயற்றியும் தமிழுலகிற் குதவினர்.
|