824 காஞ்சிப் புராணம்

சலந்தரேசம்: சலத்தில் தோன்றினமையால் சலந்தரன் எனப் பெயர் பெற்ற சலந்தராசுரன் சிவலிங்கம் தாபித்துப் பூசிக்கத் திருவேகம்பர் எழுந்தருளி அவன் விரும்பியவாறு ஆண்மையும், வலிமையும், தலைமையும், பகைவரை அழித்தலும், இறைவனை ஒழிந்த பிறரால் அழிவுறாமையும், முத்தியை வழிபட்ட இவ்விடத்தே பெறுகையும் ஆகிய இந்நலங்களை அருளப்பெற்றனன்.

எண்டிசைத் தலைவரையும் வென்று கீழ்ப்படுத்தித் திருமாலைச் சிறைப்படுத்தித் தேவர் வேண்ட விடுத்தனன்.

வாழ்நாள் உலந்தமையின் சிவபிரானொடு பொரக் கயிலையை  அணிகினன் அவுணன். அதனை அறிந்த திருமால் துறவோர் வேடம் பூண்டு அசுரன் மனைக்கிழத்தி பிருந்தையைக் கொள்ளுதற்கிது தக்க பருவம் என மதித்து அவன் மனையிடைப் பூம்பொழிலில் தங்கினர். அசுரன் மனையாள் முனிவரைக் கண்டு ‘தவத்தீர்! என் கணவர் சிவபிரானொடும் பொரத் திருக்கயிலை சென்றனர். வெல்வரோ? தோற்பரோ? விளைவறியேன் விளக்கியருளல் வேண்டும்’ என வினவினள்.

திருமாலாகிய துறவோர் ‘சிவபிரானை வென்றவர் உளரேயோ? ஆகவே, நின் கணவன் நிச்சயமாக உயிரை இழப்பன்’ என அவளுக்கு விடை கொடுத்தனர்.

அந்நிலையில், ஓர் தானவன் ஓடிவந்து ‘அம்மே! நம் படையைச்  சிவபிரான் நீறுபடுத்திப் பின் சக்கரமொன் றுண்டாக்கி அதுகொண்டு உன் தலைவனை அழித்தனன்’ என்னலும், முனிவன் அவள் கையைப் பற்றக் கணவனையிழந்த யான் மூன்று நாட்களுக்குப் பிறகு நின் மனைக்கிழத்தி யாகுவென்’ என்று விடுவித்துத் தீப்புகுந்தொழிந்தனள்.

அச்சாம்பரிற் புரண்டு மயல் பூண்ட திருமாலின் மயக்கம் நீங்க உமையம்மையார் கொடுத்த சந்தனத் திறள் மூன்றனையும் தேவர், சாம்பரி லிடத் துழாய், நெல்லி, அகத்தி மூன்று மரங்களாக முளைத்த அவற்றுள் துழாயைத் தழுவிப் பிருந்தையால் ஆயநோய் நீங்கப்பெற்று வைகுந்தம் அடைந்தனர் திருமால்.

துவாதசியில் இம்மூன்றனையும் போற்றிக் கொள்வோர்க்குத் திருமாலின் இன்னருள் கைகூடும்.

கயிலையில் அழிந்த சலந்தரன் ஒளிவடிவாய்க் காஞ்சியை அடைந்து தான் முன்பு வழிபட்ட இலிங்கத் தொன்றுறக் கலந்தனன்.

இத்தலம் பின்பு நிகழ்ந்த மாறுதலான் இப்பொழுது ஓணகாந்தன் றளியுள் சேர்ந்து அவ்விருவர் வழிபட்ட சிவலிங்கங்களுக்குத் தெற்கில் மூன்றாவது சந்நிதியாக விளங்குகிறது.