826 காஞ்சிப் புராணம்

தனியும் மேருமலையை வில்லாகவுடைய சிவபிரானே தலைவன் எனப் பல சாத்திரங்களும் வேதங்களும், புராண இதிகாசங்களும் விரிக்கின்றன’ என விளம்பின. பிரணவமும் எதிர்நின்று பகரவும் கொள்ளானாயினன் பிரமன்.

     திருமால் ஆங்குத் தோன்றித் தானே தலைவன் என, பிரமன் யானே தலைவன் என இங்ஙனம் இருவரும் மாறுபடும்பொழுது சூரிய மண்டிலத்தினின்றும் வயிரவர் எழுந்தருளினர். கண்ட அளவே வெருவிய திருமால் ஓட்டெடுத் துய்ந்தனர்.

     ‘என் மகனே! வருக’ என அழைத்த பிரமனின் பழித்துப் பேசிய ஐந்தாம் தலையை வயிரவர் நகத்தினாற் கொய்தனர். மலர்மிசையோன் உயிர்போய் மீள அருளால் உயிர்பிழைத்து மயக்க நீங்கி அம்மை அப்பரை வணங்கிப் போற்றி நான்முகனாய் வாழவும், தான் செய்த பிழையைப் பொறுக்கவும் வரம்பெற்றுச் சென்றனன்.

     சிவபெருமான் கட்டளைப்படி இரத்தப் பிச்சை ஏற்கப் புகுந்து கைகுந்தத்தில் விடுவச்சேனனைச் சூலத்திற் றூக்கினர். திருமால் தன் நெற்றி நரம்பைப் பிடுங்கி இரத்தத்தைக் கபாலத்தில் நூறாயிரம் வருடம் பெய்தும் நிரம்பாத அந்நிலையில் மூர்ச்சையுற்று விழுந்த மாலை வயிரவர் கையால் தடவி மயக்கம் நீக்கினர்.

     திருமாலுக்கு அபயமும், அருளும் வழங்கிப்போய் முனிவர் மனைவியரைப் புன்முறுவலால் மயலுறுத்தித் தேவர்தம் செருக்கை முற்றவும் இரத்தப் பலி தேர்தலால் போக்கிய வயிரவர் காஞ்சியை அணுகிக் கபாலத்தை ஓர்மருங்கு வைத்துச் சூலநுதியினின்றும் விடுவச்சேனைத் திருமாலின் வேண்டுகோளின்படி விடுத்தனர். பின்பு தம் பெயரால் வயிரவேசர் எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றி வெளிநின்ற பெருமானை உமையம்மையொடும் அருட்குறியில் இருந்து யாவர்க்கும் அருளவும், தாம் திருமுன்பிருந்து தொண்டு செய் துய்யவும் வேண்டிப் பெற்றனர் வயிரவர்.

     மேலும், இறைவனார் ஆணைப்படி இரத்தத்தைக் கணங்களுக் களிக்கச் சிலவற்றிற்கும் பருகப் போதாமை கண்டு போர்க்களத்தில் உயிர்விடுவோரைத் துறக்கம் சேர்த்து அவர் இரத்தத்தைக் கணங்களைப் பருகுவித்து இரணமண்டில வயிரவராகக் காஞ்சியைக் காவல் புரிவர்.

     இத்தலம் பிள்ளையார்பாளையம் சோளீஸ்வரர் கோயில் தெருவில் உள்ளது.

     குமரகோட்டம்: முருகப்பெருமானார் தாருகன் முதலாம் அசுரரை அழித்துத் தேவரை வாழ்வித்தபின் திருக்கயிலையில் அம்மை அப்பரை வணங்கி அருள்விளையாடல்களைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரமன் தேவர் குழாங்களுடன் சிவபிரானை வணங்கச் செல்லும்பொழுதும் மீளும் பொழுதும் முருகப் பெருமானை மதியாது சென்றனன்.