பல்வகைச் சிறப்புகளிலும் ஒரு மொழிக்கு மிக்க சிறப்பைத் தருவன இறை இலக்கியங்களாகிய அருட்டிருப்பாடல்களே. தமிழ்மொழியில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பண்டே இருந்தன எனினும், இறையருளை நிரம்பப் பெற்று இறைவனேயான பெரியார் ஒருவராலோ, பலராலோ பலபடப் பாடப்பட்ட பாடற்பெருந்தொகுதி பண்டு இல்லை. இக்குறையை முதற்கண் நிரப்பியவர், ’அறிவாற்சிவனேயானவர்’ எனப் போற்றிப் புகழப்படும் திருவாதவூர் அடிகளாகிய மாணிக்கவாசகர். இவரது காலத்தைக் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என நாட்டுதற்குச் சான்று காட்ட முயல்பவர், அடிகளைக் கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு என நாட்டுவார் அதற்குக் காட்டும் சான்றுகளை மறுக்கும் வலியிலராவர்.

தமிழின் சிறப்பியல்பாகிய பொருள் இலக்கண மரபின்படி ‘அகம், புறம்’ என இருவகையாய் அமைந்த தமிழ் இலக்கிய நடையை, இறை நெறியில் அமைத்து, ஒரு திருப்பத்தைச் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அதனால் அடிகளது திருப்பாடல்கள், ‘திருவாசகம்’, ‘திருக்கோவையார்’ என்னும் இருவேறு தொகுதிகளாய் அமைந்தன.

இக்காலத்தில் ‘நாட்டுப் பாடல்கள்’ என்று சொல்லப் படுவன போலப் பழங்காலத்தில் மகளிர் விளையாட்டு முதலியவற்றில் அமைந்த பாடல்களைப் பண்டைப்புலவர், மக்கட் பாடாண் பாட்டுகளாக ஆக்கினர். அவற்றையும் அடிகள் தமது திருவாசகத்தில் கடவுட்பாடாண் பாட்டுகளாக மாற்றியருளினார். இவற்றால், அடிகள் காலம் முதலாகத் தமிழ் மொழியில் இறை இலக்கியங்கள் மிகுவவாயின. சிவநெறியினரேயன்றிப் பிற நெறியினரும் இம்முறையை மேற்கொள்வாராயினர்.

அடிகள் அருளிச் செய்த ‘திருவாசகம், திருக்கோவையார்’ என்னும் இரண்டனுள் திருக்கோவையார் பெரும்பான்மையும் கற்று வல்ல புலவர்கட்கே பயன்படுவதாய் அமைந்தமையால், திருவாசகமே எங்கும் பெருவழக்காய்ப் பரவிப் பயன் தருவதாயிற்று. அதனால், அஃது ஒன்றற்கு உரை காணும் முயற்சியிலே பலர் ஈடுபட்டனர்.

திருக்குறள் வேள் - திரு. ஜி. வரதராசப்பிள்ளை, பி. ஏ. அவர்கள் (திருச்சிராப்பள்ளி) முன்னைத் தவத்தால் இயல்பிலேயே வாய்த்த பொருட் செல்வத்தோடு அருட்செல்வமும் பெற்றவர்கள்; சிவபூசைச் சிறப்புடையவர்கள்; ஆங்கிலத்தோடு தமிழறிவு நிரம்பியவர்கள். இவர்களது திருக்குறள் விளக்கவுரை பலர்க்குப் பயன்பட்டு வருகின்றது. இத்தமிழ்ப்பணி குறித்துத் தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானம்