அணிந்துரை
(தருமையாதீனத் தமிழ்ப்புலவர், சித்தாந்த கலைமணி,
மகாவித்துவான், முதுபெரும்புலவர்
திரு. சி. அருணைவடிவேல் முதலியார்)
மக்களை மாக்களினின்றும் பிரிப்பது மொழி.
எனினும், இஃது அனைத்து மக்களிடமும் ஒன்றாய் இல்லாது
பல்வேறு வடிவில் அமைந்துள்ளது. உலகநாடுகள் பலவற்றிலுமாகப்
பார்க்கும்பொழுது மொழிகள் மிகப்பலவாய் உள்ளன.
ஆயினும், ‘மொழி’ எனப் படுவதற்குத் தகுதி வாய்ந்த
சிறப்புடைய மொழிகள் மிகச்சிலவே.
ஒரு மொழிக்குச் சிறப்புத் தருவன
அதன் பழமை,
சொல் வளம், நூல் வளம், இலக்கண வரம்பு முதலாகப்
பல. இவை அனைத்தும் ஒருங்கே அமைந்தது நமது தாய்மொழியாகிய
தமிழ்.
ஒரு மொழி பழமை வாய்ந்ததாக இல்லாமல்
புதிதாய்த் தோன்றியதாய் இருப்பின், அது பண்டுதொட்டு வரும்
பல கருத்துகளை விளக்குவதாய் இல்லாமல், இன்று தோன்றி
நிலவும் சில கருத்துக்களை மட்டுமே விளக்குவதாய்
இருக்கும். அன்றியும், மொழி, காலப்போக்கில்
படிமுறையாக வளர்ச்சியுறுவதாகையால், ஒரு மொழி எத்துணைப்
பழமையுடையதாகின்றதோ அத்துணைக் கருத்து வளமும்
சொல் வளரும் பெற்றுத்திகழ்வதாகும். அவ்வகையில்
நம் தமிழ்மொழி, தோற்றம் அறியப்படாத தொன்மை
வாய்ந்துள்ளது.
இனி, ஒரு மொழி தான் தோன்றிய
காலம் மிகப்பழையதாயினும்
இடையே வழக்கொழிந்து மறையுமாயின், காலத்திற்கு
ஏற்ற வளர்ச்சியை அது பெற இயலாது. அதனால் அதன்
பழமையால் பயனில்லை. ஆகவே, இடையே வழக்கொழியாது
நின்று நிலவும் மொழியே உண்மையில் பழமை வாய்ந்த
மொழி எனப் போற்றற்குரியது. அந்நிலையில் தொன்மை
வாய்ந்த மொழிகளுள் அன்று முதல் இன்றுகாறும் நூல்
வழக்கில் மட்டுமன்றிப் பேச்சு வழக்கிலும் நிலைபெற்றுப்
பழமையைக் காத்துப் புதுமையை ஏற்றுப் பல்லாற்றானும்
பொலிவுற்றுத் திகழ்வது நமது தமிழ்மொழி ஒன்றே.
|