என்பதனால், எல்லாம் இறைவனது பொருளேயாதலால்,
அவனது திருப்பணிக்குச் செலவு செய்தல் பொருத்தந்தானே!
ஆனால், இச்செய்தியினை உணர்ந்த
பாண்டியன், சினமுற்று அடிகளுக்குத் திருமுகம் அனுப்பி
அழைத்தான். அடிகளுக்குத் தம் நினைவு சிறிதே வரப்பெற்றதும்
தம்மையாட்கொண்ட பெருமானிடம் சென்று முறையிட்டுக்கொண்டார். ‘குதிரைகள்
மதுரைக்கு வந்து சேரும்; அஞ்சாது போய் வருக’ எனப்
பெருமானும் விடை தந்தருள, அடிகள் மதுரைக்குத்
திரும்பிப் பாண்டியனிடம் இந்நற்செய்தியினைக்
கூறினார். எனினும், குறித்த நாளில் குதிரைகள் வாராது
போகவே, பாண்டியன் தண்டலாளரை ஏவி, அடிகளைச் சிறைப்படுத்தித்
துன்புறுத்தச் செய்தான். அடிகளுக்கு அருள்புரிவான் வேண்டிக்
காட்டில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கித் தேவகணங்களைப்
பாகர்களாகவும், தானே குதிரைச் சேவகனாகவும் குதிரைச்
சாத்தோடு மதுரை மாநகரம் வந்தான். இவ்வரலாற்று
உண்மையினைப் பின்வரும் அடிகளது வாக்குகளால் இனிது
அறியலாம்.
|