மாணிக்கவாசகர் வரலாற்றுச் சுருக்கம்
சைவ சமயாசாரியர்களுள் ஒருவராகிய
மாணிக்கவாசக அடிகள் அவதாரம் செய்த ஊர் திருவாதவூர். இது
மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில்
உள்ளது. இவர் வாழ்ந்த இடத்தில் இன்று ஒரு கோயில்
கட்டப்பட்டுள்ளது. இவரது பிள்ளைத் திருநாமம் திருவாதவூரர்
என்பர். மாணிக்கவாசகர் என்பது தீட்சாநாமம்.
இவர் அமாத்திய அந்தணர் மரபைச் சேர்ந்தவர். அமாத்தியர் -
அமைச்சர். திருவாசகமும் திருக்கோவையாரும் இவர்
பாடிய நூல்களாகும். திருவாசகம் என்பது, ‘தெய்வத்
தன்மை பொருந்திய மொழி’ என்பதாம். இறைவனால்
ஆட்கொள்ளப்பட்டுப் பிரிந்த பின்னர் மீண்டும்
இறைவனைச் சேர வேண்டும் என்று வருந்திப் பாடிய பகுதிகளே
திருவாசகத்தில் மிகப்பலவாகும். திருக்கோவையார்
அகப்பொருள் துறையில் அமைந்தது. இவை இரண்டும் எட்டாந்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடிகளது காலத்தை
ஏனைய மூவரது காலத்துக்கு முற்பட்டது என்று சிலரும்,
பிற்பட்டது என்று சிலரும் பல ஆதாரங்களைக் காட்டிக்
கூறி வருகின்றனர். எனினும், அடிகள் கி. பி. ஒன்பதாம்
நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது எல்லார்க்கும்
உடன்பாடு.
இவர் இளமையிலே எல்லாக் கல்வியும்
நிரம்பப்பெற்றுத் திறம்பட விளங்கினார். பாண்டிய
மன்னன் இவரது திறமையையும் தகுதியையும் அறிந்து
தனக்கு அமைச்சராக ஏற்றுக்கொண்டான்.
|