‘சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே’
 
என்ற மகுடத்தைப் பாடல்தோறும் இறுதியில் உடைய பிடித்த பத்தை அங்கு அருளிச் செய்தார்; பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார். அடிகள் திருப்பெருந்துறையில் குரு வடிவிற்கண்ட காட்சியை மீண்டும் இங்குக் கண்டார்.
 
  ‘காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே’

என்பது அவர் வாக்கு.

இறுதியாக அடிகள் தில்லைக்கு வந்தார். அங்கே தங்கியிருக்கும் நாளில், புத்தரை வாதில் வென்று, இலங்கை மன்னது ஊமைப் பெண்ணைப் பேசும்படி செய்து, புத்தரையும் அம்மன்னனையும் சைவராக்கினார் என்பது சொல்லப்பெறுகிறது.

திருவாசகமும் திருக்கோவையாரும் கூத்தப்பெருமானால் எழுதப்பெற்று, பெருமான் அருளால் தில்லையில் பொன்னம்பலத்தில் வைக்கப்பெற்றன. அவற்றைக் கண்ணுற்ற அர்ச்சகர் வியப்புற்று ஊர் மக்களுக்குத் தெரிவித்தார். எல்லோரும் அடிகளையடைந்து, அவற்றின் பொருளைக் கேட்க, அடிகள் அவர்களை அழைத்துக்கொண்டு பொன்னம்பலத்துக்கு வந்து, ‘திருவாசகத்துக்குப் பொருள் கூத்தப் பெருமானே’ என்று கூறிச் சோதியில் மறைந்தார். மறைந்த நாள், ஆனி மாதம் மக நட்சத்திரம் என்று கொண்டாடப் பெறுகின்றது.