உ
சிவமயம்
முன்னுரை
|
|
"ஐம்புல வேடரின்
அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்(டு)
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே." -
சிவஞானபோதம்
|
இறைவனுக்கு இரண்டு நிலைகள்
சாத்திரங்களில் கூறப்பெறும். அவை பொது, சிறப்பு
என்பனவாம். சிறப்பு நிலை என்பது தனி நிலையாகும்.
பொதுநிலையோ எனில், உயிர்களோடு கலந்த நிலையாகும்;
சிறப்பு நிலையை வாக்கு மனத்தினால்
சொல்லவும் நினைக்கவும் முடியாது. இந்நிலையை,
|
|
"இப்படியன் இந்நிறத்தன்
இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே"
|
என்பார் திருநாவுக்கரசர். இறைவன்
சிறப்பு நிலையில் தனித்திருந்தால் உயிர்களுக்கு
என்ன பயன்? ஆதலின், உயிர்களோடு கலந்து, கண்டும்
காட்டியும் வருகிறான், இவ்விரு நிலையைத்
திருநாவுக்கரசர்.
|
|
" நற்பதத்தார்
நற்பதமே ஞான மூர்த்தீ நலஞ்சுடரே நால்வேதத் தப்பால்
நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய
சூழலாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலவாத புனலுடம்பே
புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன் கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே."
|
என்று விளக்கியுள்ளார். சொற்பதமும் கடந்து
நின்ற நிலை, சிறப்பு நிலை; புலாலுடம்பே புகுந்து
நின்ற நிலை, பொது. இதனை ஒரு மேனாட்டு அறிஞர் கீழ்க்காணும்
வாக்கியத்தால் தெளிவுபடுத்துகிறார்:
"God is Transcendent and Immanent"- Aldous Huxley.
|