இனி, பொது நிலையில் அருள் புரிய வரும்போது கலந்து நிற்றலோடு குருவாக முன்னிலையில் காட்சி கொடுத்து ஆட்கொள்வதும் உண்டு. ஆனால், இக்காட்சி முன்னைத் தவத்தின் பயனால் எய்தும், அதைத்தான் மேலே கண்ட சிவஞானபோதச் சூத்திரத்தில் "குருவாய்த் தவத்தினில் உணர்த்த" என்றார். சைவத்துக்கே உரிய சிறப்பு ஒன்று உண்டு. அது, குருவாக இறைவனே எழுந்தருளி வந்து அருள் புரிவான் என்பதாம். ‘தம் முதல்’ என்ற சொற்றொடர் இவ்வுண்மையினை எத்துணைத் தெளிவாக உணர்த்துகிறது! ‘தம்’ என்பது உயிர்களைக் குறிக்கும். இவ்வண்ணம் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் இறைவனே குருவாய் வந்து, பக்குவம் எய்திய மணிவாசகப் பெருமானுக்கு அருள் புரிந்தான். அவ்வருட் காட்சியானது மறையவே, அதனை மீண்டும் பெற வேண்டும் என்று அழுது பாடியவையே திருவாசகம் ஆகும்.

திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவியினை நினைந்த போதும், பிறரது பருமையினை எண்ணிய போதும் உண்டாவது. திருவாசகத்தில் இறைவனது பெருமையினையும், அவன் காட்டிய கருணையினையும் நினைந்து நினைந்து பாடிய பாடல்கள் பலவுள. அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலை வாராது? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது மூத்தோர் வாக்கு. திருவாசகம் வேறு, சிவன் வேறு என்று எண்ணாது, திருவாசக ஏட்டினைப் பலர் நாடோறும் பூசையில் வைத்து வழிபடுவதை இன்றும் காணலாம். இது மற்றோர் சிறப்பு ஆகும்.

இத்துணைச் சிறப்புப் பொருந்திய நூலைப் படிக்க வேண்டும் என்று எண்ணியபோது என் ஆசிரியர் மறைமொழிச்செல்வர் திரு. அ. நடேச முதலியார் அவர்கள் முன் வந்து படிக்க உதவி செய்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். படித்த பின்னர்த் திருவாசகத்திற்கு எளிய முறையில் உரை எழுத வேண்டும் என்று எண்ணினேன். இதனை அறிந்த தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள், திருவாசகத்துக்கு உரை எழுதுவது பயனுடையது என்று உற்சாகப்படுத்தினார்கள்; அத்துடன் பத்தாண்டுகட்கு முன் குருபூசை நன்னாளில் கூத்தப்பெருமான் சந்நிதியில் தருமையாதீனப் பதிப்பைக் கொடுத்து ஆசீர்வதித்தார்கள். அந்த ஆணையைச் சிரமேற்கொண்டு நூலுக்கு உரை எழுதத் துணிந்தேன். இக்காலத்துக்கேற்ப எல்லோரும் எளிமையாகப்