சிவமயம்

எழுத்துச்சுவடி நிறைவு விழாவில் வெளியீட்டின்


முன்னுரை

(1948)

பின்னுரையின் முன்னுரை.

பெரியபுராண உரை எழுத்து நிறைவு.

அன்பர்களே! அடியேன் திருவருட்டுணை கொண்டு பெரியபுராண உரை எழுதத்
தொடங்கி இப்போது 14 ஆண்டுகளாயின. எழுதினதோடமையாது கோவைத்
தமிழ்ச்சங்கச் சார்பில் அவ்வப்போது அச்சிட்டு வெளியிட்டும் வந்தேன். முதற்
சஞ்சிகை 5-6-1935 தேதி சேக்கிழார் திருநாளன்று சிதம்பரத்தில் பல பெரியார்கள்
முன்னிலையில் வெளியிடப் பெற்றது. முதற் பகுதியாகத் திருமலை -
தில்லைவாழந்தணர் சருக்கங்கள் 15-9-37 தேதி நிறைவேறின. அப்போது
முகவுரைக்கு முன்னுரை என ஒன்று எழுதினேன். அதனுள் இவ்வுரை எழுத நேர்ந்த
வரலாறுகளை எழுத நேர்ந்தது. II பகுதியாக இலைமலிந்த- மும்மையாலுலகாண்ட
சருக்கங்கள் 25-12-1940 தேதியிலும், III முதற்பாகம் 26-11-43 தேதியிலும்,
இரண்டாம் பாகம் 23-3-46 தேதியிலும் வெளிப்போந்தன. அவைகட்கும்
அவ்வப்போது முன்னுரைகள் எழுதி அவ்வவை போந்த வரலாறுகளினளவு வரை
அவ்வவற்றுள் எழுத நேர்ந்தது. IV பகுதி இன்னும் 2 திங்களில் நிறைவாகுமென்று
நம்புகிறேன். அதற்கும், பின் வரும் V-VI பகுதிகளுக்கும் திருவருள்
கூட்டிவைக்குமாறு அவ்வப்போது முகவுரைகள் எழுத நேரும். ஆனால் இப்போது
எழுதும் முடிப்புரையின் முன்னுரை என்ற இது வேறு; இஃது அச்சுப் பிரதிகளுக்குச்
சம்பந்தப்பட்டதன்று. புராணவுரை எழுத்துத் திருப்பணி நிறைவாகின்ற நிலையில்
எழுதப்படுவதாகும். ஆயினும் அச்சு உருவத்தில் ஆறாவது பகுதி
நிறைவாகும்போதுதான் முடிப்பாகிய பின்னுரை எழுதலாகும். அதன் முன் அதுபற்றி
எழுதலாயினமையில் இதனைப் பின்னுரையின் முன்னுரை என்று மேற்குறியிட்டேன்.
எனது பணிகள் யாவும் எனது குறைபாடுகளைப் பின்பற்றியே தடுமாற்ற
முடையனவாதல் இயல்புதானே?

“எண்ணிலுட லொழியவுய் ரெழிற்றில்லை யம்பலத்தே, புண்ணியமன்றினிலாடும்
போதுசெயா நடங்காண, நண்ணுமுட லிதுவன்றோ நமக்குடலாய் நயந்தவுடல்”
என்றபடி முன்னுரைகளும் பின்னுரைகளும் எந்த தேதிகளிலோ எழுதச் சமயம்
நேர்ந்தனவாயினும், இவ்வுரை எழுதும் பேறுபெற்றதனால், அடியேனது எழுபதாண்டு
நீண்ட வாழ்க்கையில் மிகச் சிறந்த நாளென வொன்றிருக்குமாகில் அஃது இந்நாளே
என்பேன்; பெரிய