- xi -
சிவபெருமான் திருக்கோயில் கொண்டிருக்கும் திருப்பதிகள் பலவற்றுக்கும்
சென்று, மதுரையை அடைந்து கயற்கண் இறைவியையும் சோமசுந்தரக்
கடவுளையும் நாடோறும் தரிசித்து வழிபட்டுக்கொண்டு அப்பதியில் வதியும்
பொழுது, மீனாட்சி தேவியார் தமக்குக் கனவிலே தோன்றி ‘எம்பெருமான்
திருவிளையாடல்களைப் பாடுவாய்’ என்று பணிக்க, அப்பணியைத் தலைமேற்
கொண்டு இந்நூலைப் பாடி முடித்து, சொக்கேசர் சந்நிதியில் அறுகாற்
பீடத்திலிருந்து, அடியார்களும் புலவர்களும் முதலாயினார் கூடிய பேரவையில்
இதனை அரங்கேற்றினர் என்று பெரியோர் கூறுவர். இவர் காலம் 400
ஆண்டுகளின் முன்பாமென்றும், 850 ஆண்டுகளின் முன்பாமென்றும்
இங்ஙனம் வேற்றுமைப்படக் கூறுவாருமுளர்; ஒருவர் கூற்றும் ஆதரவுடன்
கூடியதன்று; தக்க சான்று கிடைத்த வழியே இது துணிதற்குரியதாகும்.
இவரியற்றிய வேறு தமிழ்நூல்கள் வேதாரணியப் புராணம், திருவிளையாடற்
போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி என்பன.
திருவிளையாடற் புராணத்திலுள்ள மாணிக்கம் விற்ற படலம், கால்மாறி யாடிய
படலம், நரி பரியாக்கிய படலம் என்பவற்றை நோக்குழி இவ்வாசிரியரது
அருங்கலை யுணர்ச்சியின் பரப்பு வெளிப்படும். தொல்காப்பியம் முதலிய
இலக்கணங்களிலும், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலிய சங்கச்
செய்யுட்களிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும், தேவாரம் முதலிய பன்னிரு
திருமுறைகளிலும், மெய்கண்ட நூல்கள் முதலியவற்றிலும் இவ்வாசிரியர் நல்ல
பயிற்சியுடையவர்; இதனை இந்நூலுரையுள் ஆண்டாண்டு எடுத்துக் காட்டும்
பகுதிகளால் அறியலாகும். ஈண்டுச் சில காட்டுகின்றேன்;
 
“மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழி
சிகர மாலைசூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
அகழ வோங்குநீர் வையையா லல்லது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே”

என்னும் இந்நூல் அகழிச் சிறப்புணர்த்துஞ் செய்யுள்,

“வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்”

என்னும் மருதக்கலியின் கருத்தையும்,

“செங்கதிர் மேனியான்போ லவிழ்ந்தன செழும்ப லாசம்
மங்குலூர் செல்வன்போல மலர்ந்தன காஞ்சி திங்கட்
புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை
அங்கதி ராழ யான்போ லலர்ந்தன விரிந்த காயா”

என்னும் இளவேனிலைச் சிறப்பிக்கும் இந்நூற் செய்யுள்,

“ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்ந்த செருந்தியும்
மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியும்
ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்