இறைவனால் மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாருடைய ஸ்ரீ சூக்தியாகிய திருவாய்மொழியில் முதற்பத்தின் வியாக்கியானத்திற்கு ‘ஈட்டின் தமிழாக்கம்’ என்ற பெயரோடு ஒரு புத்தகம் இவ்யாண்டின்
முதலில் சென்னைப்பல்கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது. அதனுட்பொதிந்த பொருள் இறைவனான
சர்வேஸ்வரனுடைய கல்யாணகுணங்களாகிய அமிருதமேயாதலின், அப்புத்தகம் பெரியார் பலருடைய பாராட்டுதலுக்கு
உரியதாயிற்று.
உலகத்தில் பேரறிஞர்களை எண்ணுங்கால், ‘மண்மிசை நால் விரல் நிற்கும்’ என்று பாராட்டுதற்குரியவரும்,
‘மதுநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம், யாவுள முன்னிற்பவை?’ என்ற பொய்யா மொழிக்கு
இலக்கியமாய்த் திகழ்பவரும், பரம வைதிககுல திலகருமான ஸ்ரீமத். சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியாரவர்கள்
உளம் உவந்து உள் அன்போடு கூறிய நல்வாழ்த்திற்கும் அடியேனைப் பொருள் ஆக்கியது. அப்பெரியாருடைய
மங்களாசாசனம் அடியேற்கு உறுதுணையும் உறுபெருஞ்செல்வமுமாகும். |