10. பிரபஞ்சப் பற்றற்ற தன்மை. இரக்ஷணிய
யாத்திரிகத்துள் சம்பாக்ஷணைப்படலம் 18-ம் கவியிலே சிங்கார
மாளிகையிலிருந்த பக்தி மணி முதலிய பெண்களின் குணசீலத்தை

   'கைவரு தவநிலை இயற்றுங் கன்னியர்
தெய்விக சுருதிநன் குணர்ந்த செவ்வியர்
 மெய்வரு நாவினர் விதேக முக்தர்போல்
 ஐவரை அறுவராய் அமைத்த ஆருடர்'

என்று கூறியிருப்பது பக்த சிரோமணியாகிய நம் வித்துவானுக்கே
பொருந்தும். தாம் இல்லற வாசியாயிருப்பினும் உலக வாழ்வைப்
பெரிதாய்ப் பாராட்டாமல் சதா பகவத் தியானத்திலேயே நின்று,
தெய்வீகமான வேதத்தை நன்றாய் உணர்ந்து, எப்பொழுதும்
சத்தியத்தையே பேசி, ஐம்புலன்களின் வழி யுள்ளத்தைப்
போக்காமல் நல் நிலையில் நின்ற மேலோர்:

    'மற்றிவர் சீலமும் மறைமெய்ஞ் ஞானமும்
  பற்றறுத் தியோகுசெய் பரிசும்'

என்று அடுத்த கவியில் சொல்லப்பட்டவண்ணம் இப்பெரியார்
பற்றை அறுத்து யோகஞ்செய்யும் தன்மையர்: அதாவது தாம்
உத்தம ஜீவன் முக்தராகையால் உலகம் பேய் உடல் என்னும்
மூவகைப் பற்றையும் அறுத்துவிட்டவராய், இவரது
ஜீவான்மாவானது பரமான்மாவோடு ஐக்கியப்படுந்
தன்மைத்தான ஜெபத்தியான யோகநிலையில் நிற்பார். இவராது
குணஞ் செயல்களைக் கண்ணுற்றோர் பலர் இவரை ஒரு
மஹா ரிஷியென்றே மதித்துவந்தார். இல்லறவாசியாயினும்.
துறவற இயல்புடையாரை மஹாரிஷியென வழைத்தல் நம்
நாட்டிலுள்ள மரபு. வங்காளத்தில் பிரமசமாஜத் தலைவர்களுள்
ஒருவரான தேவேந்திரநாத் தாகூர் அவர்களை இவ்வாறே
மஹாரிஷியென அழைக்கின்றார்கள்.


தேவதாஸ்பிள்ளை அவர்களும் விஷயதானமும் திரவிய
தானமும் செய்து பெரிதும் உதவி புரிந்தனர். யாம்
கிருஷ்ணபிள்ளையின் ஜீவிய சரித்திர சுருக்கத்தை
எழுதுவதற்கு ஆதாரமான சில விஷயங்கள் ஸ்ரீமான்
கடம்பவன சுந்தரநாயனார் எழுதிய நூலினின்றும் அந்நூலுக்கு
ஆனரபில் ஜஸ்டிஸ் தேவதாஸ் அவர்கன் ஆங்கிலத்தில்
எழுதியுள்ள பாயிரத்தினின்றும் கிடைத்தன. ஸ்ரீமான்
கடம்பவனம் தமிழல் நல்ல தேர்ச்சியுடையார்.
கிருஷ்ணபிள்ளையவர்களின் நற்குண சீலத்தாலும் கல்விப்
பெருக்காலும் பக்தி நலத்தாலும் கவரப்பெற்ற மானாக்கரில்
ஒருவராகி சுமார் இருபது வருஷம் மார்க்க ஆராய்ச்சி
செய்து இயேசு பெருமானையே தனது ரக்ஷகராக
ஏற்றுக்கொண்டு, குடும்ப சகிதமாய் கிறிஸ்துமதந்தழுவிய
தாமஸ் கதிர்வேல்நாயனாருடைய நெருங்கிய பந்துவாகிய
இவர் கிருஷ்ணபிள்ளை இயற்றிய நூல்களின்மீது
மிகப்பெரிய அபிமானமுடையவர். இப்பதிப்பில் இரக்ஷணிய
சரிதப்படலத்தின் ஒரு பகுதிக்கு எழுதப்பட்டிருக்கிற உரை
இவருடையதே. இயேசுகிறிஸ்துவின் சரித்திரத்தை
எடுத்துக்கூறும் பாகங்களாகிய சுவிசேஷ மார்க்கப்படலம்
இரக்ஷணிய சரிதப்படலம் என்னும் இவ்விரண்டு
படலங்களுக்கும் இவர் உரை எழுதிக்கொண்டிருப்பதாக
அறிகிறோம். மேலும் கிருஷ்ணபிள்ளை அவர்களின்
சரித்திரத்தையே இன்னம் பெருப்பித்து ஒரு புதுப்பதிப்பு
வெளியிட முயற்சி செய்வதாகவும், இப்பதிப்பு கூடிய சீக்கிரம்
வெளிவரும் என்றும் அறிகின்றோம்.