இரக்ஷணிய மனோகரம் என்னும் இச்சிறு நூலின் கடைசியில்
கூறப்பட்ட வெண்பாவானது வித்வானது பக்தி இத்தன்மையதென்பதை
உணர்த்தும். அது வருமாறு:-

  சிந்திக்க நெஞ்சடியேன் சென்னியிறைஞ்சக் கரங்கள்
வந்திக்க எஞ்ஞான்றும் வாழ்த்துகவாய் - புந்திக்குள்
வீற்றிருக்கும் ஜேசு விரைமலர்ப்பூஞ் சேவடிக்கே
ஆற்றுகமெய் அன்பின் பணி.

இதன்பொருள்: - ஹிருதயாசனத்தில் வீற்றிருக்கின்ற ஜேசுநாத
ஸ்வாமியினுடைய வாசனைகொண்ட மலர்போலும் அழகிய சிவந்த
திருவடிகளையே, எப்போதும் என் நெஞ்சு சிந்திக்கக்கடவது, என்
தலை எப்போதும் வணங்கக்கடவது, என் கரங்கள் எப்போதும்
கூப்பித் தொழக்கடவது, என் வாய் எப்போதும் வாழ்த்தக்கடவது,
அத்திருவடிகளுக்கே என் சரீரமானது எப்போதும் உத்தம
பணிவிடையைச் செய்யக்கடவது.

தமிழ்நாடெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் இரக்ஷணிய
மனோகரத்திலுள்ள பாடல்களைப்பாடிப் பெரிதும் பயன்பெறுகின்றனர்.
இப்பாடல்களில் சில ஓய்வுநாள் ஆராதனை காலத்தும்
பாடப்படுகின்றன.

4. இரக்ஷணிய குறள்.

திருவள்ளுவநாயனார் பொது மறையாக இயற்றியுள்ள
திருக்குறளைப் போன்று வித்வான் கிருஷ்ணபிள்ளையும்
இரக்ஷணிய சமயமாகிய கிறிஸ்து மத தத்வங்களை இரக்ஷணிய
குறள் என்னும் நூலில் அமைத்திருப்பதாக அறிகிறோம். இது
இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கின்றது.

பாளையங்கோட்டை மஹா வித்வான்
  ஹென்ரி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின்
            ஜீவிய சரித்திர சுருக்கம்
               முற்றுப்பெற்றது.
 

 

பசுமலை,
ஐயர்.
23 - 4 - 27.

ஜே. எஸ். மாசிலாமணி