மனமில்லை. இவர்கள் எல்லாரையும் தள்ளிவிட்டு தான்மட்டும்
தனியே கிறிஸ்தவனாகவும் துணிவில்லை.

நமது வித்வான் கிறிஸ்துமதத்தை ஏற்றுக்கொள்ளும்
விஷயத்தில் ஸ்ரீமான் தனக்கோடி ராஜம் வித்வானுடைய
சகோதரர் முத்தையா பிள்ளையும் காட்டிய சிரத்தை கொஞ்சமல்ல.
இம்மூவரும் கூடி இவ்விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து பேசி,
வித்வான் தாமிருந்த சாயர்புரத்தில் கிறிஸ்துமார்க்கத்தைத்
தழுவினால் பல சங்கடங்களும் கலகங்களும் ஏற்படுமாகையால்,
சென்னபட்டணம் சென்று அவ்விடத்தில் சில காலம் தங்கி,
பிறகு தம் மனைவி மக்களை வரவழைத்து, அவர்களுக்கும்
கிறிஸ்துமார்க்க சத்தியங்களைப் புகட்டி, கடைசியில் குடும்ப
சகிதமாக ஞானஸ்நானம் பெறுவது உசிதம் என்று
தீர்மானித்தனர். அவ்வாறே வித்வான் தன் மாணாக்கனைத்
தமது உத்தியோகத்திலிருத்திவிட்டு, தமது மனைவி
பிள்ளைகளைத் தன் சகோதரர் முத்தையாபிள்ளையின்
ஆதரவில் தன் தாயார் வசம் விட்டு, தாம் சென்னபட்டணம்
சேர்ந்தனர்.

சென்னையில் கனம் கோலப் ஐயரையும், கனம் பெர்சிவல்
ஐயரையுங் கண்டு பேசினர். பெர்சிவல் ஐயர் அவரைத்
தன்னகத்திலிருத்தி, தான் பிரசுரித்து வந்த "தினவர்த்தமானி"
என்ற பத்திரிகைக்கு இவர் உதவியைப் பெற்றார். மேலும்
பிரசிடென்சி காலேஜில் கனம் வித்வானைத் தமக்கு உதவித்
தமிழ்ப்பண்டிதராகவும் நியமித்தார். இவ்வாறு சென்னையில் நம்
வித்வான் ஸ்திரப்பட்டபின் தன் குடும்பத்தினரை அழைத்துக்
கொள்ள பலதரம் முயற்சி செய்தும் பலன்படாமற்போயிற்று.
இதனால் வித்வான் துக்கமுற்றனராயினும் சென்னையில்
இவருக்கு நற்சகவாசம் அதிகம் கிடைத்தது. திருநெல்வேலி
மிஷனைச்சேர்ந்த பாதிரிமார் இவருக்கு மிகவும் ஆறுதலான
கடிதங்களை எழுதிவந்தனர். சென்னையிலுள்ள பக்தியுள்ள
மிஷனெரியாகிய கனம் சிம்மண்ட்ஸ் ஐயர் பல தடவையும்
வித்வானை அழைத்து அவரிடத்தில் ஆத்மீக விஷயங்களைப்
பற்றிச் சம்பாஷணை செய்துவருவார். வித்வானும் கூடிய சீக்கிரம்
ஞானஸ் நானத்தைப்பற்றிய தனது முடிவான தீர்மானத்தைச்
சொல்லுவதாகக் கூறினார். அப்பால் 1858 ஆம் வருடம் மார்ச்சு
மாதம் 27ஆம் நாள் கிறிஸ்துநாத ஸ்வாமியினுடைய திருவடிகளே
தனக்கு ஜீவதாரகம் என்று நம்பி, ராயப்பேட்டை சலிவன் தோட்டத்து
கிறிஸ்தவர்களுடன் சேர்ந்துகொண்டார். இக்காலத்து
அனுபவத்தைப்பற்றி நம் வித்வான் கூறுவதாவது : -

'அன்றே யான் பூர்வத்தில் தெரியாது ஒழுகிவந்த இந்து
மதானு சார

  சடங்குகளெல்லாம் என் மனதைவிட்டு ஒழிந்தன. மார்க்க
சின்னங்களும் என் சரீரத்தைவிட்டுப் பறந்தன. வெகு
காலமாக என்னைப் பந்தித்திருந்த ஜாதிக்கட்டும் ஒழிந்தது.
இவ்வாறு சர்வ வல்லவரது திருக்கரம் அங்கங்கே நேர்ந்த
பல விக்கினங்கள், தடையிடையூறுகள் முதலிய எல்லாப்
பிரதி பந்தங்களையும் சேதித்துப் பெருவழியினின்று
ஒதுக்கி இடுக்க வழி முகப்பின் திருக்கடையிலுள்ள ஜீவ
வெளிச்சத்தண்டையில் கொண்டுவந்து சேர்த்தது.

இவ்விதம் வித்வானே இக்காலத்தில் தமக்குக் கிடைத்த
அனுபவத்தைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.