தேகாதி பிரபஞ்ச நச்சித்திரிந்துணைச்
          சேவியாப் பாவியேற்குத்
     திருவுளம் இரங்கிநீ செய்தஇந் நன்றியைச்
          சிதையாத சிந்தை தருவாய்
     பாகாயென் உளமூடு மதுரிக்க நல்லருள்
          பழுத்தொழுகு ஜீவ தருவே
     பக்தஜன பரிபால நித்யம் அவர் அநுகூல
          பரமார்த்த பரம நிதியே.

இவ்வாறு இயேசுகிறிஸ்துவினால் உண்டான ரக்ஷிப்பை
மனமகிழ்ச்சியுடன் அனுபவித்து வருங்காலத்தில் ஹென்றி பவர்
பண்டிதர் சென்னைக்கு வந்து வேதாகமத்தைத் தமிழ்
பாஷையில் மொழிபெயர்க்கும் ஊழியத்துக்கு வித்வானைத்
தெரிந்துகொண்டார். ஆயினும் தமது குடும்பத்தாரை
ஆதாயப்படுத்தும் வண்ணம் இவர் பாளையங்கோட்டை வந்து
சேரவேண்டியிருந்தது.

பாளையங்கோட்டைக்கு வந்து முருகங்குரிச்சியில் தன்
சகோதரன் முத்தையாபிள்ளையிடம் தங்கினார். வித்வான்
கிறிஸ்து மதப் பிரவேசம் செய்துவிட்டார் என்பதை அறிந்த
அவரது மனைவியாரும் தாயாரும் பட்ட வியாகுலம் சிறிதல்ல.
வித்வான் பாளையங்கோட்டை வந்து சேர்ந்த மறுதினமே
வித்வானுடைய பத்தினியார் தம் பிள்ளைகளைப்
பாளையங்கோட்டையிலேயே விட்டுவிட்டுத் தன் பெற்றார்
வீடுசேர்ந்தார். ஒன்றரை வருஷகாலம் திரும்பவேயில்லை.
அதற்கப்புறம் தம் பிள்ளைகளின் பிரிவாற்றாமையால் தம்
பர்த்தாவுடன் சில நிபந்தனைகளைச் செய்துகொண்டு
பாளையங்கோட்டைக்கு வந்து தன் கணவனுடன் கூடி வாழாமல்,
தனியாகத் தன் பழைய வீட்டில் வசித்துவந்தனர். அக்காலத்தில்
பிள்ளைகள் தாய்வீட்டுக்கும் தகப்பன் வீட்டுக்கும்
போக்குவரத்தாயிருந்தது அவர்களுக்குப் பெரு
மகிழ்ச்சியாயிருந்தது. நாளடைவில் கிறிஸ்துமத சத்தியங்களைக்
கேட்கவும், கிறிஸ்தவ லக்ஷணங்களை நன்கு மதிக்கவும்,
கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களுக்கு வரவும் தொடங்கினார்கள்.
அதற்கப்பால் 1860 எவ்வித நிபந்தனையுமின்றி தானும் தன்
மூன்று குழந்தைகளும் ஐம்பத்துநாலு வயதான தன் மாமியாரும்
அவர்கள் பெரிய தகப்பனார் புத்திரியுமாக ஆக இந்த
ஆறுபேரும் கனம் சர்ஜண்ட் ஐயரவர்களால் பாளையங்கோட்டை
திருத்துவ ஆலயத்தில் ஞானஸ் நானம் பெற்று எம்பெருமானது
திருவடிகளே சரணம் என்றடைந்து யாவருக்குமுன்பாக அவரை
ஏற்றுக்கொண்டனர். இக்காலத்தில் வித்வான் அடைந்த
அகமகிழ்ச்சிக்கு அளவில்லை. தன்னைத் தன் குடும்பத்தோடு
கொத்தடிமையாகக் கொண்ட கிறிஸ்துநாதரை எந்நேரமும் துதித்து
ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டிருந்தார்.

இதற்கப்பால் நமது வித்வானுக்கு திருநெல்வேலி ஸி. எம். எஸ்.
கல்லூரியில் பிரதம தமிழ் ஆசிரியராய் இருக்கும் உத்யோகம்
கிடைத்தது. அத்துடன் கனம் சர்ஜண்ட் ஐயரம்மாளுக்கும் தமிழ்
கற்றுக்கொடுக்கும் படி ஏற்பாடானது. ஐந்து வருஷம் இந்த
உத்தமிக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வந்தனர். இந்த உத்தமியின்
அன்பும், பரிசுத்த நடத்தையும், பக்தியும், கருத்துள்ள ஜெபமும்
கரிசனையும் அவரைக் கிறிஸ்துவுக்குள் உருவாக்கிற்று. இவ்வாறு
கனம் சர்ஜண்ட் அத்தியக்ஷரவர்கள் ஊக்கமாகச் செய்துவந்த