செல்பவன் இறைவழிபாடு செய்தவன் ஆவான். அதைக் கற்றுக் கொடுப்பவனும்
அறம் செய்தவன் ஆவான். அதனைச் செம்மையாகப் பரப்புவன் இறைவனுக்கு
வணக்கம் செலுத்தியவன் ஆவான். கல்வி நல்லன தீயனவற்றைப் பகுத்துக்
காட்டுகிறது. அது சுவர்க்கப் பாதைக்கு விளக்காகும்; தனிமையில் இருப்பவனுக்கும்
கூட்டாளி. அன்பர்கள் கூட்டத்தில் கல்வி ஓர் அணிகலன். பகைவர்களிடையிலோ
சிறந்த கேடயம். ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள ஒரு துளி மை வீர மரணம்
எய்தியவனுடைய குருதியை விடத் தூய்மையானது எனும் நபிகள் நாயகத்தின்
மொழிகள் அறிவுத் தேட்டத்தில் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது.
இச்செய்திகளையெல்லாம், “கல்வியே இறைவனைக் காட்டும்; கல்வி பகுத்தறிவை
அளிக்கிறது, எழுதுகோல் மையே தூய்மை வாய்ந்தது. கல்வியே பேரின்பம்
அளிக்கும்” எனும் தலைப்புகளுள்ள நான்கு பாடல்களில் அரிய முறையில் பதிவு
செய்திருக்கிறார் திருமாலிறையன்.

போரில் சிறைப்படும் கைதிகளை மீட்புத் தொகை கொடுத்து விடுவிப்பது
அந் நாளைய வழக்கம். பதுறுப் போரில் சிறைப்பட்டவர்களில் மீட்புத் தொகை
செலுத்த முடியாத நிலையில் இருக்கும் கைதி ஒருவன் பத்துப் பேருக்கு எழுதப்
படிக்கக் கற்றுக் கொடுத்தால் அவன் விடுதலை பெறலாம் என நாயகம்
அறிவித்தார்கள். இவ் வரலாற்றுச் செய்தியை நம் கவிஞர்

“பகைவர் தமக்கும் அருள்வழங்கும் பண்பால், உற்ற அடிமைகளைத்
தொகைப்பொன் தந்து மீட்டிடலாம்; தொடர்ந்து கையில் பொருளற்றார்
வகைக்குப் பத்துப் பேர்களுக்கு வற்றாக் கல்வி அளிப்பதுவே
தொகைக்குச் சமமாம் என ஆங்கே தோன்றல் பெருமான் அறிவித்தார்”

எனப் பாடியிருக்கக் காண்கிறோம்.

விரிவுரை கூறத்தக்க செறிவான பாடல்கள் :

இசுலாம் தோன்றுவதற்கு முந்தைய அறியாமைக் காலத்திலும், இசுலாம்
தோன்றிய காலத்திலும் அரபு நாட்டில் மது அருந்தும் பழக்கம் பெருவழக்கில்
இருந்தது. நபித் தோழர்கள் மது அருந்துவது பற்றி நாயகத்திடம் கருத்துக்
கேட்டனர். ஒரு சமயம், “ மதுவினால் பெருந்தீங்கு இருக்கிறது. ஆனால்
மக்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. தீங்கு பயனைவிட மிகப் பெரியது”
என்னும் கருத்தமைந்த இறையுரை இறங்கியது. இவ்வுரையில் மது
அருந்துபவனைத் தடுக்கக் கண்டிப்பான சட்டமில்லை. எனவே சிலர் குடித்தனர்.
சிலர் நிறுத்தினர். தொழுகையின்போது குடி மயக்கத்திலிருந்த ஒருவர்
சொற்களைப் பிறழ ஓதினார். அவ்வேளையில் “நீங்கள் கூறுவது இன்னதென