நீங்கள் அறிந்து கொள்ள முடியாத மயக்கத்தில் இருக்கும் வேளையில்
தொழுகைக்குச் செல்லாதீர்கள்” எனும் உரை இறங்கியது. இவ்வுரையும்
தொழுகையின்போது மயக்க நிலையில் இருக்கக்கூடாது எனச் சுட்டியதே தவிர,
குடிப்பதைத் தடுக்கவில்லை. இதற்கிடையே சுவர்க்கப்பேறு பெற்றவர்கள் பத்துப்
பேருள் ஒருவர் எனச் சிறப்பிக்கப்பெறும் ஸஅத் இப்னு அபீவாக்கன் என்பவர்
குடிவெறியில் இருந்தபோது பாடிய பாடல் ஒன்று மதீன ஆதரவாளர்களை
இழித்துரைப்பதாக இருந்தது. அதனால் வெகுண்ட ஓர் ஆதரவாளர் ஒட்டகத்தின்
எலும்பினால் ஸஅத்தைத் தாக்கிக் காயப்படுத்தினார். ஸஅத் அவர்கள்
பெருமானாரிடம் முறையிட்டார். அப்போது, “மதுவும், சூதாட்டமும், உருவ
வழிபாடும், அம்பெய்து குறிகேட்பதும். உறுதியாகச் சைத்தானுடைய
வேலைகளிலேயே மிகவும் வெறுக்கத் தக்கனவாம். ஆதலால், இவற்றினின்றும்
நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்”என்னும் கட்டளை இறைவனால் வழங்கப்பட்டது.
அப்போதிருந்து மது அருந்துவது கூடாது என்பது முசுலீம்கள் மீது
கட்டாயமாக்கப்பட்டது. நெடு நாளைய பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள் அதனை
உடனே நிறுத்துவது கடினமான ஒன்று. படிப்படியாகக் குறைத்து முடிவில் அதை
நிறுத்துவது எளிது. அதனால்தான் மது அருந்துவதால் நன்மையை விடத் தீமையே
மிகுந்தது என முதலில் அறிவுரை கூறி இறைவன் திருத்த முற்படுகிறான். அடுத்து
மதுமயக்கத்துடன் தொழுகை செய்யக் கூடாது என்னும் சிறுதடையை விதிக்கிறான்.
இறுதியில் மது அருந்தக் கூடாது எனக் கட்டாயமாக்கினான்.

இறையுரைகள் இரங்கிய இந்த வரிசை முறையை நம் கவிஞர்

கள்ளினால் தீமை என்னும் கருத்தினை உரைத்துப் பின்னர்க்
கள்ளினை உண்டவர்கள் கடவுளைத் தொழாதீர் என்று
சொல்லின பின்னர்க் கள்ளைத் தூயவர் முசுலீம் மாந்தர்
உள்ளதும் தீதே என்றீங்(கு) உரைத்தனன் அல்லா தானே.

முன்னோர் வழியில் . . .

உமறுவைப் பின்பற்றி எழுதினாலும் திருமாலிறையன் தனக்கென ஒரு தனி
நடையை உருவாக்கிக் கொள்கிறார். உமறுவின் கருத்துகளைத் திருமாலிறையன்
உள்வாங்கி அவற்றைத் தன் சொல்உளி கொண்டு செதுக்கி, தனித்த எழில்
கொஞ்சும் சிலையாக்கிக் காட்டியுள்ளார். காட்டில் சிறுவன் முகம்மதுவைப்
புதியவர் சிலர் பிடித்துச் சென்றனர் என்று அவருடன் சென்ற சிறுவர்கள்
ஓடோடிவந்து பாலூட்டியதாய், அலிமாவிடம் சொல்ல, அவர் பதைபதைத்து
ஓடினார். காட்டில் குழந்தையைக் கண்டதும் அவருள் எழுந்த மகிழ்ச்சியை