முகப்பு தொடக்கம்

அணிந்துரை

ஒளவை நடராசன்,
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்

சிற்றிலக்கியங்களில் சதகம் என்பது தனிப்பெருமை வாய்ந்ததாகும். ஒருநூறு பாக்களைக் கொண்டு சதகம் பாடும் மரபு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருச்சதகம் எனும் பகுதியில் காணப்படுகிறது. நூல்களுக்கு எண்களால் பெயரிடும் மரபு பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. வரலாற்றுக் கருத்துக்களைச் செய்யுளில் பெய்து கலித்துறை, அறுசீர் விருத்தம், பிற பாவினங்களாகவும் பாடுவது மண்டல சதகங்களின் மரபு. தொண்டை மண்டல சதகம் புகழ் வாய்ந்த வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்வதை அறிஞர்கள் நன்கறிவர். அவ்வகையில் பழந்தமிழ் இலக்கியமான சோழமண்டல சதகத்தைப் பேராசிரியர் புலவர் செ.இராசு அவர்கள் புதையலைக் கண்டெடுத்தவர் போலக் கொண்டு வந்து என்னிடம் காட்டி மகிழ்ந்தார்கள். சோழ நாட்டின் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைச் செறிவாகக் கொண்டு விளங்கும் சோழமண்டல சதகத்தின் மறுபதிப்பை தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது மகிழ்ச்சியோடு வெளியிடுகிறது.

ஆலஞ்சேரி மயிந்தன், வேளூர் கிழான், சேந்தன், புத்தூர்வேள் முதலிய பெருமக்களைச் சோழ வள்ளல்களாகக் குறிப்பிடும் செய்தி இந்நூலில் இடம் பெறுகிறது. மயிந்தன் என்ற ஆண்பாற் பெயர் மயிந்தி-மந்தி எனப் பெண்பாற் பெயராக மருவி வழங்குவதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் என் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

அந்த வகையில் நுண்ணிய பல செய்திகளை அறுசீர் விருத்தத்தில் வழங்கியுள்ள சோழமண்டல சதகம் வேளூர் ஆத்மநாத தேசிகர் என்ற புலவர் பெருமகனாரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் சோழ நாட்டுச் சித்தாமூரில் 18 ஆம் நூற்றாண்டில் அரங்கேறியது. இத்தகைய அரிய நூலினைச் சோழமண்டலத்தில் நடைபெறும் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடுவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமிதம் அடைகிறது. இந்நூலைச் சிறந்தமுறையில் பதிப்பித்த கல்வெட்டுத் துறைப் பேராசிரியர் கல்லெழுத்துக் கலைஞர் புலவர் செ. இராசு அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

இந்த அரிய நூலைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்பிற்காக வழங்கிய இராசிபுரம் கவிஞர் கந்தசாமி அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

18-12-1994

ஒளவை நடராசன்
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்