|  பதிப்புரை   தமிழ் இலக்கியச் செல்வங்கள் எண்ணற்றவை. அவை பேரிலக்கியங்கள், 
              சிற்றிலக்கியங்கள் எனப் பகுக்கப்படும். சிற்றிலக்கியங்களைப் ‘பிரபந்தங்கள்’ 
              என்றும் அழைப்பர். பிரபந்தங்களை 96 வகை எனப் பாட்டியல் நூல்கள் கூறும். 
              96 வகைப் பிரபந்தங்களில் ‘சதகம்’ என்பது ஒருவகை. ‘சதம்’ 
              என்பது 100ஐக் குறிக்கும். சதம் செய்யுள்கள் கொண்ட நூல் சதகம் ஆயிற்று. 
              சதகம் என்றால் நூறு பாடல்களால் இயன்ற ஓர் இலக்கியம் என்பது பொருள். 
              சில சதக நூல்களில் பாயிரம், அவையடக்கம், காப்பு, வாழ்த்துச் செய்யுள்கள் 
              போன்றவை நூற்றுக்குப் புறம்பாக அமைவதும் உண்டு. இச் சோழ மண்டல சதகத்தில் 
              105 செய்யுள்கள் உள்ளன.   இச் சொல்லை சத் + அகம் எனப் பிரித்து உண்மைப் பொருளைக் 
              கூறும் இலக்கியம் என்பர் சிலர். சதம் என்பதற்கு நிலைத்திருப்பது, இறுதியானது 
              என்றும் பொருள் கூறுவர்.   பழந்தமிழ் இலக்கியங்களிற் பல செய்யுள்களின் எண்ணிக்கையால் 
              பெயர் பெற்றுள்ளன. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, 
              கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை 
              ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது என 
              அவை அழைக்கப்படும். நாலடியாரை நாலடிநானூறு எனவும், பழமொழியைப் பழமொழிநானூறு 
              எனவும் அழைக்கும் வழக்கமும் உண்டு.   பஞ்சகம், அட்டகம், நவமணிமாலை, பத்து, பதிகம் என்பன 
              முறையே 5, 8, 9, 10 செய்யுள்களைக் கொண்ட இலக்கியங்கள் ஆகும். இருபா 
              இருபஃது, முனிமொழி முப்பது, ஏரெழுபது, முத்தொள்ளாயிரம், நாலாயிர திவ்யப் 
              பிரபந்தம் என்பனவும் எண் குறித்த பெயர்களையுடைய நூல்களே.   நூறு செய்யுள்களைக் கொண்ட நூல் ஒன்று சதமணி மாலை எனக் 
              குறிக்கப்படுகிறது. நூறு என்ற எண்ணிக்கையை விதந்து கூறாமலும் மிகப் 
              பல நூல்கள் நூறு பாடல்களுடன் உள்ளன.   சதக இலக்கியங்கள் வடமொழியிலும், ஏனைய திராவிட மொழிகளிலும் 
              நிறைய உள்ளன.   சதக இலக்கியங்கள் பற்றிப் பல பாட்டியல் இலக்கண நூல்கள் 
              வரையறை செய்து விதிகள் கூறியுள்ளன.   சயமாம் மிகுபொருள் ஒன்றிள் பாநூறு சதகமதே                                                  (நவநீதப்பாட்டியல் 
              10)
  நூறான வெண்பாக் கலித்துறையின் ஆதல் சதகம்                                                          (பிரபந்த 
              மரபியல் 16)
  விழையும் ஒருபொள்மேல் ஒருநூறு தழைய உரைத்தல் சதகம் என்ப                      (இலக்கண விளக்கம் 847)
  சதகம் என்பதுவே சதச்செய்யு ளாலே அகப்பொருள் புறப்பொருள் இரண்டில் ஒன்று அறைதலே                      (பிரபந்த தீபம் 81)
  அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள் ஒன்றன் தேலாதல் கற்பித்து ஒருநூறு
 செய்யுள் உரைப்பது சதகமாம் என்ப                      (முத்து வீரியம் 56)
  பயிலும் ஓர் பாட்டால் நூறு உரைப்பது சதகம்                      (சுவாமிநாதம் 
              168)   என்பன அவை,   சதக இலக்கியம் ஒரு பொருள் கருதி வருதல் வேண்டும். 
              வெண்பா அல்லது கலித்துறைச் செய்யுளால் இயற்றப் பெறல் வேண்டும். அகப்பொருள், 
              புறப்பொருள் பற்றி அவை அமைய வேண்டும். நூல் முழுவதும் ஒரே செய்யுள் 
              வகையால் பாடப்பெறல் வேண்டும் என்பன சதக இலக்கண விதிகளாகக் கூறப்பட்டுள்ளன. 
              பிற்காலத்தில் இவை அனைத்தும் புலவர்களால் மீறப்பட்டுள்ளன 
              என்பது சதக நூல்களிலிருந்து தெரியவருகின்றன. அவை புதியன புகுதல் என்ற 
              விதிப்படி அமைந்தனவாம். இச் சதக நூல்கள் பக்தி, வாழ்வியல் என்ற பொருள்களைப் 
              பற்றியே பெரும்பாலும் எழுந்தன. பக்திச் சதகங்கள் தெய்வீகம் அல்லது 
              தெய்வீகத் தலங்கள் பற்றி அமைந்தன. வாழ்வியல் சதகங்கள் பெரும்பாலும் 
              நீதிச் சதகங்களாக ஏற்பட்டன. நூற்றுக் கணக்கில் சதக நூல்கள் தமிழில் 
              பெருகின.   சங்க இலக்கியங்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தைத் தமிழில் 
              நமக்குத் தெரிந்த முதல் சதகம் எனலாம். மாணிக்கவாசகரின் ‘திருச் சதகம்’ 
              தொன்மையான சதக இலக்கியம். அந்நூல் கட்டளைக் கலித்துறை, தரவு கொச்சகக் 
              கலிப்பா, எண்சீர் விருத்தம், எழுசீர் விருத்தம், அறுசீர் விருத்தம், 
              கலிவிருத்தம், கலிநிலைத்துறை ஆகிய செய்யுள்களால் பாடப்பட்டுள்ளன. அந்நூல் 
              அந்தாதி யாப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பிற்காலத்தில் 
              அகப்பொருள், புறப்பொருள்கள் அல்லாமல் பக்தி, வாழ்வியல், நீதிச் சதகங்களே 
              பெருகின. நாட்டின் வரலாற்றைக் கூறும் மண்டல சதகங்களும் பல தோன்றின. 
              கல்வெட்டுக்களில் ‘சோழ நாடு’ என்ற தொடரே முதலில் பயின்று 
              வருகிறது. ‘சோழநாட்டுக் காவிரித் தென்கரை திருவாரூர்க் கூற்றத்துப் 
              பிரமதேயமான அடியப்பியச் சதுர்வேதமங்கலம்’ ‘சோணாட்டும் சோணாட்டுப்படும் 
              புற நாடுகளிலும்’ [S.I.I. 17-617; 3 - 9] என்ற தொடர்களைக் காணுகின்றோம். 
              மாமன்னன் இராசராசன் காலம் முதல் [கி.பி. 985 - 1014] 
              ஒரு நாட்டை மண்டலம் என்று கூறும் முறை பெரிதும் வழக்கத்தில் வந்தது. 
              சோழமண்டலம்   சோழமண்டலத்து அருமொழிதேவ வளநாட்டு மங்கள நாட்டுப் புதுக்குடி [ARE 22 of 1922]
 சோழமண்டலச் சீர்மை தஞ்சாவூர் உசாவடி கம்பூர்
  என்ற தொடர்களைக் கல்வெட்டில் காணுகிறோம். இராசராசன் 
              காலத்தில் 1009 ஆம் ஆண்டு ‘மண்டலம்’ என்ற சொல் முதலாவதாகப் பயின்று 
              வந்துள்ளது.   மண்டலத் தலைவர்கள் ‘மண்டல முதலிகள்’ எனப்பட்டனர். 
              இராமநாதபுரம் சேதுபதிகள் ‘அதிபதியான மண்டலாதிபதி’ என அழைக்கப்பட்டனர். 
              ‘மண்டலிகர்’ ‘மண்டில மாக்கள்’ என உயர் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். 
              விசயநகர ஆட்சிக்குப் பின் அரசர்களையும், உயர் அதிகாரிகளையும் குறிக்க 
              ‘மகாமண்டலே சுவரன்’ என்ற தொடர் பயன்படுத்தப்பட்டது.   நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் சோழநாட்டுப் 
              பிடவூர், அழுந்தூர், நாங்கூர், நாவூர், ஆலஞ்சேரி, பெருஞ்சிக்கல், வல்லம், 
              கிழார் முதலிய ஊர்களில் வேள், அரசு என்ற பட்டம் பெற்று வாழ்ந்த தலைவர்களை 
              ‘மண்டல மாக்களும் தண்டத் தலைவரும்’ ஆவர் என்று கூறுகிறார்.   சோழர்கள் நாளில்  
               
                |  பாண்டி நாடு  | - இராசராச மண்டலம்  |   
                | கொங்கு நாடு  | - அதிராசராச மண்டலம், சோழகேரள மண்டலம்  |   
                | தொண்டை நாடு  | - ஜெயங்கொண்ட சோழ மண்டலம்  |   
                | ஈழநாடு  | - மும்முடிச் சோழ மண்டலம்  |   
                | நுளம்பாடி  | - நிகரிலி சோழ மண்டலம்  |   
                | கீழ்க் கங்கநாடு  | - முடிகொண்ட சோழ மண்டலம்  |   
                | மேல்க் கங்கநாடு  | - கங்கைகொண்ட சோழ மண்டலம்  |   
                | தடிகைபாடி  | - விக்கிரம சோழ மண்டலம்  |   என அழைக்கப்பட்டன.   ஒரு நாட்டின் - மண்டலத்தின் பன்முக வரலாற்றுச் சிறப்புக்களையெல்லாம் 
              தொகுத்துக் கூறும் சதக இலக்கியங்கள் மண்டல சதகங்கள் எனப்பட்டன. தமிழில் 
              பல மண்டல சதகங்கள் பிற்காலத்தில் தோன்றின. அவை யாவும் அந்தந்த மண்டலத்தில் 
              பல்விதப் பெருமைகளை விளக்குவதாக அமைந்தன.   ஈழமண்டல சதகம், கார்மண்டல சதகம், கானாட்டுச் சதகம், 
              கொங்குமண்டல சதகம், தொண்டைமண்டல சதகம்,
 நந்தமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம், மிழலைச் சதகம்
  என்பன மண்டல வரலாறு கூறும் வரலாற்றுச் சதகங்களாக அமைந்துள்ளன. 
              சோழநாட்டின் பல்வேறு பெருமைகளைச் சிறப்பித்துப் பாடப்பட்ட 
              நூல் சோழமண்டல சதகமாகும். சோழநாடு, சோழ அரசர், அவர்தம் வீரம், ஆட்சிச் 
              சிறப்பு, சோழ நாட்டு எல்லை, நிலவளம், நீர்வளம், காவிரி, வேளாண்மை, 
              நெல்விளைச்சல், உழவர்கள், தலங்கள், திருப்பணி மக்கள், தலைவர்கள், வள்ளல்கள், 
              கொடைச்சிறப்பு, வீரர்கள், சமயப்பெருமை, அடியார்கள், நாயன்மார்கள், 
              சமயத் தலைவர்கள், இலக்கியங்கள், புலவர்கள், பிறசிறப்புச் செய்திகள் 
              பற்றிய பற்பல அரிய செய்திகளை இந்நூல் தொகுத்துக் கூறுகிறது.   கி.பி. 1723 ஆம் ஆண்டு சோழநாட்டு வேளூர் ஆத்மநாத தேசிகர் 
              என்னும் புலவர் பெருமானால் இந்நூல் பாடப்பட்டது. மராட்டிய மன்னர் சகசி 
              இராமப்பர் என்ற வள்ளல், சித்தாமூர்ச் சோழியர் மரபைச் சேர்ந்த நள்ளாறு 
              வைத்தியலிங்கம் என்பார் மகன் அருணாசலம் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர் 
              என்று தெரிகிறது. இவர் காலம் கி.பி. 1650 முதல் 1728 வரை என்று முனைவர் 
              எ. சுப்பராயலு அவர்கள் கருதுகிறார்கள். (Political Geography of the 
              Chola Country P.I.)   சோழிய வேளாளர்கட்குக் குருத்துவத் தன்மை வாய்ந்த சைவ 
              ஆச்சார்ய தேசிகர் மரபைச் சேர்ந்தவர். தேசிகர் மரபில் நந்சிகேசுவர கோத்திரத்தைச் 
              சேர்ந்தவர். நன்கு தமிழ் பயின்றவர். இவைகளைத் தவிர ஆசிரியரைப் பற்றிய 
              வேறு விபரங்கள் தெரியவில்லை.   இந்நூல் சித்தாமூர் பொன்வைத்தநாத சுவாமி திருச்சன்னதியில் 
              அரங்கேற்றப்பட்டது.   சோழநாட்டு உழுகுடிகளான சோழிய வேளாளர் புகழ் மிகுத்துக் 
              கூறப்பட்டுள்ளது. ஏனைய மண்டல சதகங்களிலும் பெரும்பாலும் வேளாளரே பாடப்பட்டுள்ளனர். 
              அநேகமாக எல்லா மண்டல சதக நூல்களும் கட்டளைக் கலித்துறைப் 
              பாவால் இயன்றவை. ஆனால் இச் சோழமண்டல சதகம் மட்டும் அறுசீர் விருத்தத்தில் 
              பாடப்பட்டுள்ளது. மண்டல சதக நூலில் இது ஒரு புதுமையாகும். பாடுதற்கு 
              எளிய பா மரபை இவர் தேர்ந்தெடுத்துப் பாடியதால் பல பாடல்கள் எளிமையாகப் 
              பொருள் விளங்கும் வண்ணம் உள்ளன.   சென்ற நூற்றாண்டின் இறுதியில் சித்தாமூர் இராமநாதபிள்ளை 
              மகன் சபாபதி பிள்ளை அவர்கள் சோழமண்டல சதகத்தைப் பதிப்பிக்கும் முயற்சியை 
              மேற்கொண்டார். அவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 
              அவர்களிடம் நூல் பதிப்புக் குறித்துச் சில அறிவுரைகள் பெற்றுள்ளார். 
              பின் என்ன காரணத்தினாலோ சித்தாமூர் சபாபதி பிள்ளை அவர்களால் இந்நூல் 
              பதிப்பிக்க முடியாமல் போயிற்று.   1906ஆம் ஆண்டு கும்பகோணத்தில் தமிழ்ப் பேராசிரியராக 
              விளங்கிய மகாவித்துவான் ஒருவரிடம் சித்தாமூர் சிதம்பரம்பிள்ளை அவர்கள் 
              சோழமண்டல சதகத்தைப் பதிப்பிக்கும் பணியைத் தந்தார். கும்பகோணம் மகாவித்துவான் 
              பதிப்பிப்பதாகக் கூறிக் காலங்கழித்தார்; பின் அவர் இந்நூலைப் பதிப்பிக்கவே 
              இல்லை.   பின்னர் குடவாசல் வித்துவான் ஒருவர் சோழமண்டல சதகம் 
              பதிப்பிப்பதாகக் கூறி ஏடுகளை வாங்கிச் சென்றார். அவரும் பதிப்பிக்கவில்லை. 
              பின்னர் பலரும் வேண்டிக் கொள்ளவே திருவாரூர் இலக்கண 
              விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் இந்நூலைப் பதிப்பிக்க 
              முன்வந்தார். சித்தாமூரில் அவருக்குத் தேவையான ஓலைச் சுவடிகளும், காகிதப் 
              பிரதிகளும் கிடைத்தன.   தஞ்சைக் கலியாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் 
              எல்.உலகநாத பிள்ளை அவர்களும், திருவாரூர் ‘கமலாஸனி’ பத்திராதிபர் தியாகராச 
              ஞானியாரும் தம்மிடம் இருந்த சோழமண்டல சதகச் சுவடிகளை அன்புடன் சோமசுந்தர 
              தேசிகரிடம் வழங்கினர்.   சோழமண்டல சதகப் பதிப்புப்பணி நடைபெறும் பொழுது தருமை 
              யாதீனத் தலைவர் தவத்திரு சொக்கலிங்கத் தம்பிரான் அவர்களும், தரங்கம்பாடி 
              தர்மசம்வர்த்தனி விலாசத்தைச் சேர்ந்தவரும், சோழிய வேளாளரில் நாங்கூர் 
              கிழான் மரபைச் சேர்ந்தவருமாகிய ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களும், 
              ஐ.சுவாமிநாத பிள்ளை அவர்களும் தக்க அறிவுரைகள் பலவற்றைச் சோமசுந்தர 
              தேசிகருக்கு வழங்கினர்.   சோமசுந்தர தேசிகர் பதிப்பில் வரலாற்று விளக்கங்கள், 
              பாடப்பட்டோர் வரலாறு என நூலின் தொடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளன. மேற்கோள் 
              பாடல்கள் இடையில் தரப்பட்டுள்ளன. சதகப் பாடல்கள் தமிழ் எண்களுடன் உடுக்குறியிட்டுக் 
              காட்டப்பட்டுள்ளன.   இந்நூலில் 105 செய்யுள்கள் உள்ளன [சதகம் 100, சிறப்புப் 
              பாயிரம் 1, காப்பு 1, அவையடக்கம் 1, வாழ்த்து 2].   இந்நூலின் முதல் பதிப்பு 1916ஆம் ஆண்டு மாயூரம் கமலா 
              பிரஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.   சோழமண்டலத்தின் கலைக்களஞ்சியமாகத் திகழும் இச் சோழ 
              மண்டல சதகம் இன்று கிடைப்பது எங்கும் அரிதாகிவிட்டது. எனவே தஞ்சாவூரில் 
              நடைபெறும் எட்டாம் மாநாட்டின் நினைவாக இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக 
              வாயிலாக வெளியிடப்படுகிறது.   இப்பதிப்புப் பாடல்கள் பொருள் விளங்கும்வண்ணம் எளியமுறையில் 
              சந்திபிரித்து அச்சிடப்பட்டுள்ளன. செய்யுளுக்குரிய விளக்கங்கள் செய்யுளின் 
              கீழ்த் தரப்பட்டுள்ளன. செய்யுள் கருத்துக்களுக்கு ஏற்பத் தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
              ஏற்ற இடங்களில் மேற்கொள் செய்யுள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பொருளடக்கமும், 
              செய்யுள் முதற்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளன. இந்நூலின் பாடல் 
              எண் 30 இல் சுருதிமான் என்பதை நத்தமான் என திருத்தி வாசித்துக் கொள்ளுமாறு 
              கேட்டுக் கொள்கிறேன்.   இராசிபுரம் ஊமையாம்பட்டிக் கவிஞரும், தேசியப் போராட்ட 
              வீரரும், தமிழ் இலக்கிய ஏடுகளின் காவலருமாகிய திரு கவிஞர் ந. கந்தசாமி 
              அவர்கள் தாம் அரிதாகப் பேணிப் பாதுகாத்து வைத்திருந்த சோழமண்டல 
              சதக நூலை அன்புடன் வழங்கினார்கள். வேறு சில மண்டல சதகங்களோடு 
              ஒன்றாகக் கட்டம் செய்யப்பட்டிருந்த சோழமண்டல சதகத்தை அறுத்துப் பிரித்துக் 
              கட்டி அளித்த பெருந்தன்மை என் உள்ளத்தை நெகிழ்வித்தது. அவருக்கு என் 
              மனமார்ந்த நன்றி பல்கலைக் கழகத்தின் சார்பில் உரியதாகுக. நூலுக்கு 
              அணிந்துரை நல்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஒளவை 
              நடராசன் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.   தமிழ்ப் பல்கலைக்கழகம் ஓலைச்சுவடித் துறையைச் சேர்ந்த 
              ஆய்வாளர் புலவர் ப.வெ. நாகராசன், முதுநிலை விரிவுரையாளர் முனைவர் கே.இரா. 
              மாதவன் ஆகியோர் அரிய அறிவுரைகள் பலவற்றை வழங்கினர். சோழமண்டலத்தின் 
              வரைபடத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை முதுநிலை விரிவுரையாளர் 
              முனைவர் கா. இராசன் அவர்கள் வரைந்து உதவினார்கள். இவர்கள் அனைவருக்கும் 
              என் நன்றி உரியதாகுக.   சோழநாடு தொடர்பான சில செய்திகளைத் திருவாளர்கள் தஞ்சை 
              வழக்கறிஞர்கள் வி.எஸ். இராமலிங்கம், டி.என். இராமச்சந்திரன், சுந்தரப்பெருமாள் 
              கோயில் மா. சிவகுருநாத பிள்ளை, பேராசிரியர் சிவ. திருச்சிற்றம்பலம் 
              ஆகியோர் அளித்தனர். அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. பதிப்புப் 
              பணிகளில் உதவிய திரு சி. இலட்சுமணன் அவர்கட்கு என் நன்றி உரியதாகுக. 
              இந்நூலை நல்லமுறையில் அச்சிட்டு விரைவில் வெளிவருவதற்கு 
              உறுதுணையாக இருந்த காந்தி அச்சகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் 
              தெரிவித்துக்கொள்கிறேன்.   இதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட அனுமதி அளித்த 
              துணைவேந்தர் அவர்கட்கு நன்றி உரியதாகுக.  
               
                |  தஞ்சாவூர், 25-12-1994
 | இங்ஙனம், செ. இராசு
 |  |