பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,

'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
     அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
     பாரிக்கத் தகுவன் என்றே'

கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.

இவன்  பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர்  கூறுகின்றார்.  இதனால்  அக்காலத்திய  தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச்  சத்தி்யரின்  கால்வழியில்  வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய  ஒழுக்கத்தைக்  கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர்   சயங்கொண்டாரும்   சோழர்   மரபு   வரலாறு  கூறுமிடத்துச்
சோழர்களின்  முன்னோராக  வடநாட்டுச்  சத்திரியர்  பலரைக்  கூறுவதும்
ஈண்டு   நோக்கத்தக்கது.    இவரை   அடுத்துச்   சோழர்   அவைக்களப்
புலவராகத்  திகழ்ந்த  ஒட்டக்கூத்தரும்  தாம்  பாடிய  மூவர்   உலாவிலும்,
சோழ  மரபு  கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்
சத்திரியர்  பலரைக்  கூறுவதும்   கருததக்கது. '.........................................முந்நூல்
பெருமார்பின்   வந்தொளிரப்   பிறப்பிரண்டா  வதுபிறந்து சிறந்த பின்னர்'
எனவும், 'வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே'
எனவும  ஆசிரியர் கூறுமாறு காண்க.

இங்ஙனம்  பூணூலணிந்தும்,  வடமொழி  மறை  பயின்றும்   ஒழுகிய
தோடன்றிக் குலோத்துங்கன், வடநாட்டரசன் போன்று, மழைவளம் மிகுமாறு
பல  வேள்விகள்  நடைபெறுமாறும்  செய்தான்.