'கொற்றவர்கோன் வாள் அபயன் அறிய வாளும்
     குவலயத்தோர் கலையனைத்தும் கூற ஆங்கே
கற்றுவந்தார் கற்ற அவன் காணுமா போல்
            கடைபோகக் கண்டருள்என் கல்வி என்றே'

மொழிந்ததாகக்  கூறி  ஆசிரியர்   குலோத்துங்கனின்  இவ்வியல்பை
நமக்குக்  காட்டுகின்றார்.

இனி, இவன்  இசைத்துறையிலும் கைபோகியவனாய் அத்துறையில் பல
நூல்களையும்  இயற்றியிருந்தானென்று  தெரிகிறது.

'வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்'

என  வருமாறு  காண்க.  இவன்  காஞ்சியில்  செய்தமைத்த  சித்திர
மண்டபத்தே  அமைச்சரும்,  அரசரும்  புடைசூழ  வீற்றிருந்தபொழுது,

'தாள மும்செல வும்பிழை யாவகை
தான்வ குத்தன தன்னெதிர் பாடியே
காள முங்களி றும்பெறும் பாணர்தம்
கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே'

என்று கூறப்படுகின்றது. இதனால் இவன்  இசைநூல் வகுத்திருந்தனன்
என்பதும், அவன்  வகுத்த  இசையைப்  பாணர்  அவன் முன்னேயே பாடிக்
காட்டினர்  என்பதும்,  அங்ஙனம் அவர்கள் பாடியவிடத்துக் குலோத்துங்கன்
பிழை  கண்டு  கேட்டனன்  என்பதும்  ஈண்டுக்  குறிக்கப்பட்டவாறு காண்க.
இதனால்  குலோத்துங்கன்  இசைக்  கலையை  முற்றக்கற்று   முழுதுணர்ந்த
பேரறிஞனாவான்  என்பது  தெள்ளிதிற்  புலப்படுகிறதன்றோ?

வீரராசேந்திரன் இவனை இளவரசில் வைத்தமையை,

'இசையுடன்எ டுத்தகொடி அபயன் அவ
னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே'

என்னும் அடிகளில் குறிப்பித்தார் ஆசிரியர். இவன்  இயற்கையிலேயே
வீரஞ்செறிந்த  உள்ளத்தினனாய்  இருந்தான்  என்பது, இளவரசில்  வைத்த
உடனேயே  இவன்  போர்