இனி,  அக்கால  வீரர்,  தெய்வத்தினிடத்து  வரம்  வேண்டி, அதற்கு
மாறாகத்  தம்   உறுப்பையும்  அரிந்து  கொடுத்தனர்  என்பது  காளியின்
முன்னால்,

'சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று
பரவும்ஒலி கடல்ஒலிபோல் பரக்கு மாலோ'

என்னும் தாழிசையால் உணரப்படுகின்றது.

இனி,  அக்கால  வீரர்   உடுக்கை   முழக்கிக்    கடாப்பலி   இடும்
இயற்கையைப்,

'பகடி டந்துகொள் பசுங்குருதி இன்று தலைவீ
பலிகொள் என்றகுரல் எண்திசை பிளந்து மிசைவான்
முகடி டந்துரு மெறிந்தென முழங்க உடனே
மொகுமொ கென்றொலி மிகுந்தம ருகங்கள் பலவே'

எனும் தாழிசை காட்டி நிற்கிறது.

கோயிலின் முன்  இருக்கும்  பலிபீடம்  பலி  இடற்குரிய  இடமாகவே
திகழ்ந்திருந்த தென்பதை,

'நீண்டபலி பீடத்தில் அரிந்துவைத்த
நெடுங்குஞ்சிச் சிரத்தை'

என வருவது உணர்த்தி நிற்கிறது.

அக்காலத்தே மணவினை முதலிய மங்கள காரியங்களில் அறுகம்புல்லை
(நெல்லுடன்)  இடல்  மங்கலச்   செயலாக   வழங்கப்பட்டு   வந்திருக்கிறது.
குலோத்துங்கன்  முடிசூடிய  பொழுது,

'அறைகழல் அரசர் அப்போ
தடிமிசை அறுகெடுத்திட'

எனக் கூறப்பட்டவாறு காண்க.

கோயில்,  அரண்மனை  முதலியவற்றிற்குத்  கடைகால்பறித்த உடனே,
கடைகாலில் பொன், மணி முதலியவற்றை இட்டுப் பின் கடைகால்  எழுப்பல்
வழக்கமென்பது,