காளி  கோயிலைக்  கூறப்புகுந்த  ஆசிரியர், அக்கோயிற்கு அடிப்படை
அமைத்தமை கூறிய விடத்து,

'பரும ணிக்கருத் திருஇ ருத்தியே'

எனக் கூறுவதால் உணரப்படுகின்றது.

அக்காலத்தே   சமணர்கள் நாடோறும்    குளியாமலும்    ஆடை
யுடுத்தாமலும்,   ஒருபோ   துண்டும்,  தலையை மொட்டையிட்டும் இருக்கும்
வழக்கம்  பூண்டிருந்தனர்  என்பது,

'வரைக் கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்
அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே'

எனக்  கலிங்கர்  சமணவேடம்  பூண்டோடியமை  கூறிய விடத்தாலும்,

'உயிரைக் கொல்லாச் சமண் பேய்கள் ஒருபோழ் துண்ணும்'

எனப் பேய்மேல் வைத்துக் கூறியவிடத்தாலும் உணரப்படும் .

புத்தர்கள்   செவ்வாடை   போர்த்துந்   தலையை  மொட்டையிட்டும்
இருப்பர்  என்பது,  கலிங்கர் புத்தர்  உருக்கொண்டு  ஓடியமை  கூறுங்கால்,

‘குறியாகக் குருதிகொடி ஆடையாகக்
கொண்டுடுத்துப் போர்த்தும் குஞ்சி முண்டித்து’

எனக் குறிக்குமாற்றால் உணரப்படுகின்றது.

புத்தருள்    ஒரு    சாரார்   தோலைப்   போர்க்கும்    வழக்கமும்
கொண்டிருந்தனர்  என்பது.

'முழுத்தோல் போர்க்கும் புத்தப் பேய்'

எனப்  பேய்மேல்  வைத்துக்  கூறியவாற்றால்  உணரப்படுகின்றது.