‘கூடும் இளம்பிறையில் குறுவெயர் முத்துருளக்
கொங்கை வடம்புரளச் செங்கழு நீர் அளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
கலவி விடாமடவீர் கடைதிற மின்திறமின்.’

இனி,   ஆசிரியர்    பொருளுக்கேற்ற    உவமையை    யமைத்துப்
பொருள்  சிறக்கச்   செய்யுமாற்றைக்  காண்க.   பேய்களின்   வடிவத்தைக்
காட்டப்புகுந்த ஆசிரியர் அதன் கால் கைகளின் இயல்பைக் கூறுகின்றார்;

'கருநெ டும்பனங் காடுமு ழுமையும்
காலும் கையும் உடையன போல்வன'

அவற்றின்  கைகளுக்கும்  கால்களுக்கும் பனைமரங்களை உவமையாக
வைத்தனர். அவற்றின் முதுகுகளின் தோற்றத்தைக் கூறுகின்றவர்.

'மரக்க லத்தின்ம றிப்புறம் ஒப்பன'

     

எனக்  கூறுகின்றார்.  கடல்  நடுவண்  காற்றால்  ஓடும் மரக்கலத்தின்
மறிந்து  தோன்றும்  பின்புறம்  போன்றதாம்  அவற்றின்  முதுகுப்புறங்கள்!
அவற்றின்  பல்லுக்குவமை  கூறுகின்றவர்,

'கொட்டும் மேழியும் கோத்தன பல்லின'

     

என,   மண்  வெட்டியையும்,   கலப்பை  மேழியையும் கூறுகின்றார்.
முன்  பற்களுக்கும் இரு கடைவாய்ப்புறத்துத்தோன்றும் பற்களுக்கும் அவை
ஏற்ற உவமையல்லவோ?

போர்க்களத்தே      தலையற்ற       குறையுடல்கள்      துள்ளிக்
கொண்டிருக்கின்றன.  பேய்கள்  அவற்றின் பின்னே மகிழ்ச்சியால் குதித்துக்
கூத்தாடுகின்றன.  இக்  காட்சியைக்  கூறுவார்,

'கவந்தம்ஆட முன்பு தங்க ளிப்பொ டாடு பேயினம்
நிவந்த ஆடல் ஆட்டு விக்கும் நித்த காரர் ஒக்குமே'

என்கிறார்.  முன்னிற்பாரைக் கூத்தாட்டுவிக்குங் கூத்தரை ஒத்தனவாம்
பேயினங்கள்.