'விருத ராசப யங்கரன் செங்கையில்
வேல்சி வந்தது கீர்த்திவெ ளுத்ததே'

(2)' ...............................................இமயத்தினைத்
திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி
செய்ய கோலில்வளை வில்லையே '

     (3) 'கறுத்த செழி யன்கழல்சி வப்பவரை ஏற'
     (4) 'ஒருகை இருபனை வேழம் உந்தவே'

என்பன காண்க.

இனிச், சிலேடை நயம்படச் சில செய்யுட்களை அமைத்தும் இனிமையுற மொழிகின்றார்.

(1) ‘காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ. '

காஞ்சி  இடையணியையும்,  காஞ்சி  நகரையும்  குறித்தது.  கலிங்கம் மேலாடையையும் கலிங்கம் என்ற ஊரையும் குறித்தது.

(2)' நக்காஞ் சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனைவிட்
டக்கா னகத்தே உயிர்பறிப்பீர்
அம்பொற் கபாடம் திறமினோ '

காஞ்சி  இடையணியையும்,  காஞ்சி  நகரையும்  குறித்தது. வடமலை மாலையணிந்த முலையையும், இமயத்தையும் குறித்தது. வெளி  இடையையும் போர்க்களத்தையும்  குறித்தது.  வேடனை  என்பது  மன்மதனை  என்றும்,
வேடன் போன்ற கருணாகரனை என்றும் பொருள்பட்டது.

இனிப், பொருளணியேயன்றிச் சொல்லணியும் பல இடங்களில்  அழகு செய்து நிற்கின்றன.

(1) ‘பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும்’