(5) கருணாகரன்   போர்க்களத்தே  முற்பட்டுப்  பொருத   பொழுது
அவன்  போர்க்கு  ஆற்றாது  அஞ்சிய  கலிங்கரின்  செய்தி   கூறுமிடத்து
'அச்சச்'  சுவைக்குச்  சிறந்ததோர்  எடுத்துக்காட்டாகும்.

‘எதுகொல் இதுஇது மாயை ஒன்றுகொல்
     எரிகொல் மறலிகொல் ஊழியின்கடை
அதுகொல் எனஅல றாவிழுந்தனர்
     அலதி குலதியோ டேழ்க லிங்கரே’.

(6) குலோத்துங்கன்  படை  தன்  நாட்டிற் புகுந்தமையறிந்து கலிங்க
வேந்தன்  சினந்து  கூறுமிடம்  'வீரச்'  சுவை  பொருந்தியதாம்.

‘கானரணும் மலையரணும் கடலரணும்
     சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரணம் உடைத்தென்று கருதாது
     வருவதுமத் தண்டு போலும்’.

(7) கலிங்கவேந்தன்  அச்செய்தியைக் கேள்வியுற்றபொழுது, அவனது
நிலையைக் கூறும் பகுதி  'வெகுளிச்'  சுவையில்  சிறந்து  தோன்றுகின்றது.

'அந்தரமொன் றறியாத வடக லிங்கர்
     குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
      கைபுடைத்து வியர்த்து நோக்கி.'

(8) கலிங்கப் போர்க்களத்தே பேய்கள் நிணக்கூழ் அட்டு மகிழ்வுடன்
உண்ணும்  செய்தியைக்   கூறுமிடத்தே    'உவகைச்'   சுவை   நிறைந்து
விளங்குகின்றது.

‘ஓடி உடல் வியர்த் துண்ணீரே
     உந்தி பறந்திளைத் துண்ணீரே
ஆடி அசைந்தசைந் துண்ணீரே
      அற்ற தறஅறிந் துண்ணீரே’

இனி, இடத்துக்கேற்ற  சந்தம்  அமைத்துத்  தாம் கூறும் பொருளை
நம்கண்  காணுமாறு  காட்டும்  ஆசிரியரியல்பைக்  காண்போம்.