என்று பெயர் பெற்றது. தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் மருதூர் உண்டு. ‘சீவல்லபன்’ என்ற பாண்டியனால் வெட்டப் பெற்ற ஏரி ‘சீ வல்லபன் பேரேரி’ என்று பெயர் பெற்றுப்பின் ‘சீவலப்பேரி’ என்று மருவிற்று. முக்கூடல் இப்போது சீவலப்பேரி என்ற பெயரால் விளங்குகின்றது. முக்கூடலில் அழகர் (திருமால்) திருக்கோவில் உண்டு. “வீரபாண்டியப் பேரிப் பாய்ச்சலும்” என்று வருவதால் வீரபாண்டியனால் வெட்டப் பெற்ற ஏரியும் இருந்தது என்பது அறியத் தக்கது. பள்ளு என்பது 96 வகை (விருந்து நூல்களுள்)ச் சிறு நூல்களுள் ஒன்று. புதிதாக அப்போதைக்கப்போது தோன்றும் சிறு நூல்களை ‘விருந்து’ என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இவற்றைத் தொகுத்துத் தொண்ணூற்றாறு என்று வகைசெய்து அவற்றின் அமைப்பினை விளக்கி இலக்கணமும் முன்னோர்கள் செய்தனர். வச்சணந்திமாலை, பன்னிருபாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் முதலியன இவற்றில் பெரும்பான்மையான நூல்களைப்பற்றி விளக்கம் தருகின்றன. ஆனால், பள்ளின் இலக்கணம் கூறப்படவில்லை. பிரபந்த மரபியலில் 96 நூல்களும் கூறப்பட்டுள்ளன என்பர். 1732 இல் செய்யப்பட்ட சதுரகராதி 96 நூல்களுக்கும் விளக்கம் கூறுகின்றது. பள்ளின் அமைப்பும் கூறப்பட்டிருக்கின்றது. முக்கூடற் பள்ளின் ஆசிரியர் யார்? இந் நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் மிகவுஞ் சிறந்த கல்விநலம் வாய்ந்த கவிஞர். எத்தகைய பெருங் கவிஞருக்கும் ஒப்பாகச் சொல்லத் தக்கவர். ஐந்திணை நெறியளாவிச் செல்லுகின்ற இவருடைய கவிதைகளின் சுவை நலங்களையும், கவிக் கூற்றாக இவர் பாடியிருக்குங் கொச்சகக் கலிப்பாக்களின் கவிதைச் சுவை நலத்தையும் உணர்ந்து நோக்கினால், இவர் கம்பர் போன்ற பெருங் கவிஞருடன் சேர்த்து எண்ணத்தக்கவர் என்று ஓர் ஐயப்பாடும் இல்லாமல் அறைந்து கூறலாம். இந்நூலில் ஒன்பதுவகை உணர்ச்சிநலங்களால் வரும் அருஞ்சுவைக் கவிதைகளையும் படித்து உணர்ந்து பாடியாடிக் களிகூர்ந்து துய்க்கலாம். முக்கூடற்பள்ளு நாடகத்தை இயற் |