முகப்புதொடக்கம்
20 முக்கூடற் பள்ளு

இந்நூல் ஒன்பதுவகை உணர்வுகளால் பிறக்கும் கவிதைகளின் ஒரு பேரின்பத்தை முற்றுந் தந்து மகிழ்விக்கின்றது. முதலில் வியப்பும் இறுதியில் சாந்தமும் உள்ள நூலாக விளங்குகின்றது.

மூத்தபள்ளி தோன்றுகின்றாள்; அவளுடைய அழகு வியக்கத் தக்கதாக இருக்கின்றது; பாடல் தெளிவாக அவள் சாயல் உருவம் உடை நடை நளினங்களைக் காட்டுகின்றது. கவிஞரே பார்த்து வியக்கிறார்.

"உள்ளத்தில் ஊசலிடும் உல்லாசப் பார்வைவிழிக்
 கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ
 வெள்ளத்தி லேதுயில்கார் மெய்யழகர் முக்கூடற்
 பள்ளத்தி யாரழகு பார்க்க முடியாதே"

தன் காதலனை அவள் நோக்குகின்ற உல்லாசப் பார்வை விழியின் கள்ளத்தினாலே இரும்பும் கல்லும் கரையும் என்று கவிஞரே மருளுகின்றார்.

"பள்ளத்தியார"் என்று சிறப்பு விகுதி சேர்த்து மதித்துப் போற்றுகின்றார். இவர் காட்சி கண்கொள்ளாக்காட்சி என்கின்றார். பின்பு, பிறை நுதலில் வெண்ணீறுபூசி அஞ்சனந் தோய்ந்த கெண்டை விழிகளுடன் நீலக்கல் மாலையணிந்து பஞ்சவர்ணப் பட்டுடுத்தி மருதூர்ப்பள்ளியாகிய இளையபள்ளி தோன்றுகிறாள். சைவ நெறியில் வாழ்கின்ற இவள், ஆதி மருதீசருக்கு ஆட்பட்ட இவள் அழகருக்கும் பாதி அடிமைப்படுமோ என்று கவிஞர் அழகுக்கு வியந்தும் அடிமைக்கு இரங்கியும் உருகுகின்றார்.

"ஆதிமரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்
 பாதியடி மைப்படுமோ பள்ளிமரு தூரிளையாள்"

என்று இரங்குகின்ற நூலாசிரியரின் சமயப் பொதுநலங் காண்க. அவ்வாறு இரங்கி அவளின் ஒளிபொருந்திய முகத்தால் பள்ளருக்குக் காட்சி கொடுத்து அவள் வயலில் இறங்கி நடுகை நட்டபோது ஒரு பூவிலேயே ஐந்து பூவுக்கும் சேர்த்துப் பயிராகும் என்று கூறி வியக்கின்றார்.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்