முகப்புதொடக்கம்
22 முக்கூடற் பள்ளு

அவனுக்கு ஏதேனும் ஒன்றானால் நயினார்க்குத்தான் சேதம்; என்ன நடந்ததென்று அறியேன்; அழகர் திருவுளம் எப்படி என்று அறியலாமென்றிருக்கிறேன் நயினாரே” என்று மறைத்துப் பேசினாள்.

“திசைபோன சூதுகற்ற மருதூர்ப்பள்ளியே! ஏ கள்ளி! நீ அசையாமல் பள்ளனைக் குச்சுக்குள்ளே வைத்துக்கொண்டு இசையாத வார்த்தை சொல்கிறாயே” என்று கூறிப் பண்ணைக்காரன் சீறுகிறான். பின்பு பள்ளன் வெளியேவந்து வித்து வகை, மாட்டுவகை, ஏர்க்கால்வகை முதலியன கூறுகின்றான்; பண்ணைக்காரன் நிலத்துக்குக் கிடை வைப்பதற்கு இடையனைக் கூட்டிவரச் சொல்கின்றான்; கோனேரிக் கோன் வருகின்றான்; அவனை வயலுக்குக் கிடை வைக்க அனுப்பிவிட்டு் இளையாள் குடிலிற் சென்று பள்ளன் உறங்குகின்றான்.

மூத்தவள் பண்ணைக்காரனிடம் போய்,

"இடையரைக் கொண் டேவயலில் ஏவிஇளை யாள்குடிலிற்
கிடைநமக்கு நல்ல கிடையெனச்சென் றான்குடும்பன்"

என்று முறையிடுகின்றாள். அவன் இயல்புக ளெல்லாவற்றையும் சொல்கின்றாள்; பின்பு பள்ளன் ஆட்டுக்கிடை வைத்துவிட்டு வருவதுபோல வந்தான்; எல்லா இடத்திற்கும் ஆட்டுக்கிடை வைத்தாயிற்று என்கிறான்; பண்ணைக்காரன் சீறிப் பள்ளனைக் குட்டையில் அடிக்கிறான்; இளையபள்ளி வந்து பார்த்து வருந்துகிறாள்; பள்ளன் அவளை, ‘நீ ஒன்றும் பேசாதே; சகதியிலே கல்லெறிந்த கதையாக்காதே; மூத்தபள்ளி பார்க்கவருவாள்’ என்று அனுப்பிவிடுகின்றான். மூத்தபள்ளி கணவன் மேலுள்ள அன்பினால் பண்ணைக்காரனிடம் உடன்பாடு கேட்டுச் சோறு கொண்டு போய்ப் பள்ளனுக்குக் கொடுக்கிறாள்; அவன் தன் குற்றத்துக்கு வருந்தி அவளைக் கெஞ்சுகிறான்; மூத்தபள்ளி பண்ணைக்காரனைப் பணிந்து வேண்டுதல் செய்து குட்டையைக் கழற்றச் செய்கிறாள்.

பின்பு, பள்ளன் வந்து வித்துவகை, மாட்டுவகை, ஏர்க்கால்வகை யெல்லாம் கூறி நல்லநாட் பார்த்து நாள் ஏர்கட்டி உழுகிறான். பள்ளனை மாடு முட்டுகிறது; மயங்கிவிழுகிறான்; பள்

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்