பதிப்புரை

ஒல்காப் பெருமைத் தொல்காப்பியக் காலத்தின் பின் நம் செந்தமிழியற்கை சிவணிய நம் தமிழகத்தில் தோன்றிய அருத்தமிழ் நூல்கள் அளப்பில. அவற்றுள் சிறு நூல்களும் பெரு நூல்களும் பல.

சிறு நூல்களின் நிரலில் ஒன்றாகத் திகழ்வது பிள்ளைத் தமிழெனப் பெயரிய நூலாகும். பிள்ளைத்தமிழென்பது கடவுளர்களையோ மக்களுள் மாண்புற்றார்களையோ பிள்ளைமை பருவத்தினராக்கி அவ்விளம் பருவநிலைகளைச் சுவைபடப் புகழ்ந்து பாடப் பெறுவது.

அவ்வகையில் மணங்கமழ் தெய்வத்து இளநல உருவத்திறையோனாகிய முருகப்பெருமான்மீது பத்தியின் பாலராய்ப் பல புலமைச் சான்றோர்களால் பாடப்பெற்ற பிள்ளை நூல்கள் பெருவரவின. அவையிற்றுள் ஒன்றே ‘திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்’ எனப்பெறும் இத்திருநூல்.

இது, தண்பொருந்தம் தத்துறு அலைகளால் முத்தையும் நெல்லையும் ஒதுக்கி வளம்பெருக்கி அப்பயனால் முத்தமிழையும் வளர்த்துச் செல்வ வளத்தையும் கல்வி வளத்தையும் பெருக்கும் நாடாகிய பாண்டிநாட்டில் சீரலைவாயென்னும் சீரலையாப் பேறுற்ற திருச்செந்தூர் நகர்க்கண் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற திருக்செந்திலாண்டவனாகிய