xii
அணிந்துரைகள்

பெருமக்களுக்கும், பொதுவாகத் தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும், பெரு விருந்தாகும் என்பது வெறும் புகழ்ச்சி அன்று ;  உண்மையே ஆகும் ! இதன்மூலம் அவ்வுரை ஆசிரியரின் பரந்த இலக்கண இலக்கிய புலமையையும், சைவ சித்தாந்த அறிவையும், திருமுறைகளின் ஞானத்தையும் நன்கு உணரலாம். பெரிய புராண ஆராய்ச்சி செய்வார்க்கும், பிள்ளைத் தமிழ் என்னும் பொருள்பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் பட்டம் பெற விழைவார்க்கும் இவ்விளக்க உரை பெரிதும் துணைசெய்யும் என்பது எனது துணிபு, இத்தகைய அரிய பெரிய ஆராய்ச்சி விளக்க உரையினை எழுதிய திரு. கண்ணப்ப முதலியார் அவர்கட்கு இறைவன் எல்லா நலங்களும் அருளுமாறு அவனது திருவடிகளை வணங்குகிறேன். 

இப்புத்தகத்தை வெளியிட முழுப்பொறுப்பு எடுத்துக் கொண்ட திருப்போரூர் ஸ்ரீகந்தசுவாமி கோவில் தர்மகர்த்தர் திரு. சிவப்பிரகாசம் அவர்களுக்குச் சைவ சமயத் தொண்டர்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளனர். அவர் தம் சீரிய முயற்சிக்குச் சைவப் பெருமக்களின் நன்றி உரித்தாகுக. 

சேக்கிழார் பிள்ளைத் தமிழ் விளக்க விரிவுரை நூல் ஆகிய இதனை, அச்சேக்கிழார் பெருமான் திருமரபில் தோன்றிய வரும், அவரைப் போலவே முதலமைச்சராக விளங்கிப் பக்தியும், பண்பும் நிறைந்தவரும், அறிவு ஆற்றல் மிக்க நல்ல அறிவாளர்களை ஆராய்ந்தெடுத்து நியமித்து அவர்களின் மூலம் சமய நிலையங்களையும் கோயில்களையும் நன்கினிது போற்றிக் காத்து வளர்த்து வருபவரும் ஆகிய நம் தமிழக முதலமைச்சர் திரு. எம். பக்தவத்சலம் அவர்களுக்கு,  இவ்வுரை நூலாசிரியர் உரிமையாக்கியிருப்பது மிகவும் பொருத்தமும் சிறப்பும் உடைய செயலாகும். 

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
    தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
    ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
    செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி.

.இராமலிங்க ரெட்டியார்.