இவை போல்வனவெல்லாம், பாரதியார் தமது நுண்ணுணர்வினால் கதைக் கலங்காரமாகக்
கற்பித்துக் கூட்டிக் கூறியனவாம்.

பெரியபுராண வரலாற்றிற்கு மூலமாயுள்ள ‘நம்பியாண்டார் நம்பி
திருவந்தாதி’யில் சுருக்கமாகக் கூறப்பெற்றுள்ள திருநாளைப்போவார் சரிதச் செய்யுளும்,
திருத்தொண்டர் புராணசாரத்திலுள்ள திருநாளைப்போவார் சரிதச்செய்யுளும் வருமாறு:-

 

நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே.


நன்மைதிகழ் மேற்கானாட் டாதனூர்வாழ்
       நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்
பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்
       பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி
வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த
       வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற
மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்
       விளங்குநடந் தொழமன்றுண் மேவினாரே.