நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
இயற்றிய

கோபால கிருஷ்ண பாரதியார்
சரித்திரம்.

*******

 
  * “அருவாகியுருவாகி யனைத்துமாய் நின்றபிரான்
   மருவாருங் குழலுமையாண் மணவாளன் மகிழ்ந்தருளும்”
 

திருவாரூர் என்னும் திவ்விய ஸ்தலத்துக்கு அருகேயுள்ள நரிமணம் என்னும் கிராமத்தில்
சுமார் நூற்றைம்பது வருஷங்களுக்குமுன்னே நாற்குலத்திலும் மேற்குலமான
பிராமணகுலத்திலே, கோதண்டராமய்யர் குமாரர் ராமசாமி பாரதியார் என்பவருக்கு,
அருந்தவச்செல்வப் புதல்வராய்ப் பிறந்தவராவார், நந்தனார்சரித்திரக் கீர்த்தனை
இயற்றிய கோபாலகிருஷ்ணபாரதியார் என்னும் பெருந்தகையார்.

இவரது தந்தையாரும் பாட்டனாரும் வீணைவாசிப்பதில் மிகவும் தேர்ச்சி
பெற்றவராயிருந்தார்கள். கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்களிடமிருந்தே சங்கீத
சாஸ்திரப் பயிற்சி பெற்றனர். மிக்க இளம் பிராயத்திலேயே இவர் சங்கீதத்தில் தம்
முன்னோர் அடைந்திருந்த ஞானத்தினும் மிக்க ஞானமுடையவராயினார். தமது
பதினாறாவது வயதுவரையில் நரிமணத்திலேயே தங்கிச் சங்கீதகலை பயின்று வந்தனர்.

___________________

* பெரியபுராணம்.