நிதியாய் இராமராயர் என்பவர் அரசாளுமாறு ஏற்பாடு செய்தனர்.
இராமராயர் ஓரிடத்திலும் நிலைத்து வசிக்காமல், ராஜகட்டத்திலிருந்து விசால கட்டம் வரையிலுள்ள கோட்டை ஒவ்வொன்றிலும், சில சில காலம் தங்கினார். அவ்வாறு செய்து முகலாயர் கவனத்தை ஒருநிலையில் நில்லாதபடி சிதறச் செய்ய வேண்டும் என்பதே அவர்நோக்கம். ஆனால், முகலாயர் ராஜகட்டத்தை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இராமராயர் செஞ்சிக் கோட்டைக்கு விரைந்து செல்ல வேண்டுமென்று மராட்டியத் தலைவர்களும் மந்திரிகளும் ஆலோசனை கூறினார்கள். ஆகவே, 1689-ஆம் ஆண்டின் இறுதியில் இராமராயர் பகைவரிடம் அகப்படாமல், தந்திரமாகச் செஞ்சிக்கோட்டையை அடைந்தார்.
இராமராயர் செஞ்சியை அடைந்த பிறகு, அரசாங்கத்தை அங்கு ஏற்படுத்தியதனால், பலர் அந்நகருக்கு வரலாயினர். பின்னர், செஞ்சி மராட்டியரின் செல்வாக்குள்ள புதியதொரு தலைநகரமாய் விளங்கிற்று. அதனால், புனா ராஜ்யத்தின் மீது நோக்கம் வைத்திருந்த முகலாயப் படைகள் தங்கள் நோக்கத்தை விட்டு, செஞ்சி நகரத்தின் மீது கருத்தைச் செலுத்தின. இராமராயர் தாம் சிறந்த சூழ்ச்சி செய்ததாகக் கருதினார். முகலாயப் படைகள் செஞ்சிக்கு வந்தால், தாம் மற்ற இந்து நாயக்கர்களின் உதவியைப் பெற்று ஒரு பெரும்படையைத் திரட்டிக் கோல்கொண்டா, பீஜப்பூர் என்னும் நாடுகளைக் கைப்பற்றலாம் என்று அவர் எண்ணியிருந்தார்.
செஞ்சியில் தங்கிய இராமராயருக்கு மிகுந்த பொருள் தேவையாயிருந்தது. அப்பொழுது தென்னிந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்த ஐரோப்பியக் கம்பெனிகளிடமிருந்து கடன் வாங்குவது உத்தமம் என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. 1689-ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களைக் கூறும் ஆங்கிலேயர் தினக்குறிப்பில் கூனிமேடு என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த இங்க்லீஷ் பாக்டரியின் தலைவர், ஆங்கிலேயர் |