கத்தைத் தெரிவிக்கவே, அவர்கள் மனம் மகிழ்ந்து, கறிகளும் ரொட்டிகளும் அவரவர் கையார மெய்வழக்கம் செய்தார்கள். நானும் வயிறு புடைக்கத் தின்று, பின்பு கூசாமல் வங்கிப்புகையும் பிடித்தேன். உண்ட மயக்கத்தால் பொழுது சாயும்மட்டும் உறங்கினேன். இரவிலும் எனக்கு நல்ல உணவு கிடைத்தது.
மறுநாள், பாளையத்தில் உள்ள பல விஷயங்களையும் அறிந்துகொண்டேன். குதிரைப் பாஷையும் தெரிந்து கொண்டேன். இவ்வாறு பதினைந்துநாட்கள் கழிந்த பின்னர், அமாவாசையிருட்டில், பாளையக்கார ரெல்லாரும் ஆழ்ந்ததூக்கத்திலிருக்கும் சமயம் பார்த்து, மாயமாய் ஒண்டி ஒண்டிப்போய், மரகதமலைதனையே உருச்செய்து வைத்துக் கடைந்தெடுத்த சித்திரம் போன்ற குதிரையொன்றைத் திருடி மெள்ள வெளியேறிக் கொண்டிருந்தேன்.
அப்போது என் தலைவிதிவசமாகச் சோணங்கி நாயொன்று குரைத்தது. உடனே காவற்காரர்கள் விழித்துக் குதிரையைத் தேடிக்கொண்டு சுற்றுமுற்றும் ஓடினார்கள். ஆபத்து வந்ததென்று எண்ணி உடனே தண்ணீர் எடுக்கும் தோற்பைக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டேன். காவலாளிகளோ, பந்தமும் தீவட்டியும் கொண்டு வெகு சுறுசுறுப்பாகத் தேடலானார்கள். துருத்திக்குள்ளிருப்பது பாதுகாப்பன்று என்று தோன்றவே, நான் விறகுக்கட்டுக்களின் நடுவே போய்ப் பதுங்கினேன். அப்போது என்னைத் தேள் கொட்டியது. வலி பொறுக்கமுடியவில்லை ; புத்தியோ தடுமாறியது ; கண்ணீர் பெருகியது ; ஆனால், வாய்விட்டு அழமுடியுமா? ‘பாப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்த ஒப்புப் போலே வாய்விட்டு யாதும் சொல்லமுடியாத நிலையில் வருந்தினேன். தேள் கொட்டினால் உட்கொள்ளக் கூடிய மருந்து என்னிடமிருந்துங்கூட உட்கொள்ள எனக்குப் புத்தி தோன்றவில்லை ; அவ்வளவு மனக்கலக்கம் எனக்கு உண்டாயிற்று.
காவலாளிகள் அவ்விடத்திற்கும் வந்துவிடுவார்கள் என்று அஞ்சி வேறொரு பக்கத்திற்கு உருண்டு சென்றேன். |