தவமுடையீர்! நும் காதலியாகிய அடியாள் கூறும் விண்ணப்பங் கேட்டருள் புரிய
வேண்டுகிறேன். "நம் புதல்வர் பசித் துன்பத்தாற் படும் பாடு சொல்ல என்னா லியலாது.
அத்துயரத்தை நீக்குவது உங்கள் கடமையாகும். வறுமை உடல்வனப்பினைக் கெடுக்கும்,
சோம்பலைக் கொடுக்கும், பொருட்பற்றினை மிகுக்கும், தலைவன் தலைவரிடையே
கலகங்களை விளைக்கும், அவமானம், பொய், பேராசை இவற்றையாக்கும். மகிழ்ச்சிக்
கடலுக்கு அது வடவைத் தீயாம். எண்ணற்ற துன்பங்கட்கு இருப்பிடமாம். ஒழுங்காகிய
கானகத்தை யெரிக்கும் தீயாம். கொடியவற்றுள் எல்லாம் கொடிதாகிய வறுமையைப்
போக்க வழிதேட வேண்டும். நீங்கள் இளமையில் யாதவகுலத்திற் றோன்றிய கண்ணனுடன்
ஒருங்கிருந்து பல கலைகளுங் கற்றவர் என்பதை யானறிவேன். அக்கண்ணன் துவாரகை
மன்னன் ஆதலால் அவர்பாற் சென்று நம் குறை கூறினால் பெருஞ் செல்வம் நல்குவார்.
அச்செல்வத்தைக்கொண்டு நம் சிறுவர் பசித்துன்பத்தைப் போக்க வேண்டுகிறேன் என்று
கூறினள்.

அதுகேட்ட குசேலர், நீ பெற்ற மக்களுக்காக மிகவும் வருந்துகின்றாய், முற்பிறப்பிற்
புண்ணியம் புரிந்தோர் இப் பிறப்பிற் செல்வம் அடைந்தின்புறுவார். இல்லையெனில்
வறுமையும் துன்பமும்தாம் அனுபவிப்பார். இதுகுறித்து நீ ஏன் வருந்துகின்றாய், அவரவர்
வினைப்பயனுக்குத் தக்கவாறு இன்ப துன்பங்களை இறைவன் அளிப்பான்.
அவற்றையனுபவித்துத்தானே வாழவேண்டும், கல்லுக்குள் இருக்கும் சிறிய தேரைக்கும்
உணவளித்துக் காக்காமல் விடுவனோ? காப்பான். இதுகுறித்து வருந்துவதை இனிமேல்
நீக்கி மனவமைதியுடனிரு என்று கூறினன்.

குசேலன் பின்னும் தன் மனைவியை நோக்கி "நீ செல்வத்தை விரும்புகின்றனை.
அச் செல்வம் நிலையில்லாதது. செல்வமுடையோர் கொடுங்கோல் மன்னர்க்கும்,
கள்வர்க்கும், தாயத்தார்க்கும் அஞ்சி வாழவேண்டும்; அது அச்சத்தைக்