வழியாகும். மக்கள் பொருட்டு வருந்தும் இவள் மனத்துயரும் நீங்கும் என்று
மனத்துட்கொண்டான். பின்னர் அன்புடன் மனைவியை நோக்கி "கடவுளர், ஆசிரியர்,
அரசர் என்றிவரைக் காணச் செல்வோர் கையுறை ஏதேனும் கொண்டு செல்வது
முறையாகும். சிறு கையுறையொன்று வேண்டும். அதனை அமைத்துக் கொடு என்றான்.
அவள் பலநாள் தன் பங்குத் தானியத்தைச் சேர்த்துவைத்து அவல் இடித்துக் கந்தைத்
துணியில் முடிந்து கொடுத்தாள். அதனை யெடுத்து மேலாடையாகப் போர்த்துக் குசேலர்
புறப்பட்டார். துவாரகைக்குச் செல்லும் வழிவினவியாய்ந்து நடந்தார். உயர்ந்தோங்கிய
மலைகள் பல கடந்தார். கரடி புலி சிங்கம் முதலிய கொடிய விலங்கினங்கள் வாழும்
காடு பல கடந்தார். வாவியும் பூஞ்சோலையும் வயலும் சூழ்ந்த நாடு பல கண்டார்;
நகரங்கள் பல கண்டார்; இவற்றையெல்லாங் கண்டு செல்லும்போது பாலைவனமும்
குறுக்கிட்டது. காட்டு நெறியிற் செல்லும்போது பரற் கல்லுறுத்தியது கால்களில். முட்கள்
தைத்தன. முதுவேனிற் காலமாதலால் கடுவெயில் வெதுப்பக் கால்களில் கொப்புளம்
தோன்றின. எடுத்தடி வைத்து நட்்ப்பதற்கும் இயலாத நிலைமையடைந்து குசேலர்
மனஞ்சோர்ந்தார் மனைவி சொற்கேட்டு வந்தது பிழையென நினைத்து கழிவிரக்கமுற்றார்.
துயர் கூர்ந்தார் ; மனத்துட் பலவாறு சிந்தித்தார். பசியால் மெலிந்தார். மரத்து நிழலில்
சிறிது அமர்ந்தார். உண்ணும் நீர் கிடையாது வாய் புலர்ந்தார். இவ்வாறு பகற்பொழுது
கழித்தார். இராப்பொழுதில் உறங்க நமக்கு இடம் கொடு்ப்பார் யாவர் ? ஒருவரும் இலர்
என்று ஆராய்ந்து ஒரு கோயில் வாயிலிற் படுத்துறங்கினர். பின்னர் எழுந்து நடந்தார்.
துவாரகை இன்னும் நெடுந்தூரத்திலிருக்கிறது என்று சொல்லுகின்றனரே ? வழி நடக்கக்
கால் வலியில்லையே ? உதவி யொருவரும் இலரே ? கடந்து துவாரகையுட் புகுந்தாலும்
என்னை யார் மதிப்பார் ? அறியாது கண்ணனைக் காண எண்ணி வந்தேனே ?
அறியாமையாலன்றோ வழிநடக்கத் துணிந்தேன். முடிமன்னர்