குட்சென்று மறையப் பின்றொடர்ந்து குகைக்குட் புகுந்தவன்; முசுகுந்தன் அங்குப்
படுத்துத் தூங்கியதையறியாது அவனையே கண்ணனென்று கருதிக் காலாலுதைத்து
எழுப்பியவன். முசுகுந்தன் தன்னை யார் உறக்கத்தினின்று எழுப்பினார்களோ
அவர்கள் உடல் வெந்து பொடியாக வேண்டும் என்று வரம் பெற்றிருந்த
காரணத்தால் உடல் வெந்து சாம்பலானவன்.(253,689)

காளி்ந்தி:-இசை பாடுதலில் வல்லவள்; கண்ணனை இசைபாடி மகிழ்வித்துக்
காதலுண்டாக்கி மணந்தாள்.(697)

குசேலன்:-இவன்ஒரு மறையோன் சுதாமா என்னும் பெயருடையவன்;
கண்ணனோடு ஒருங்குகற்றவன்; சுசீலை என்னும் கற்புடை மனைவியை மணந்தவன்;
இருபத்தேழு மக்களைப் பெற்றவன்; வறுமைப் பிணியால் வருந்தி மனைவி
வேண்டக் கண்ணன்பாற் சென்று செல்வம் பெற்று வந்தவன்; பின் செல்வத்தையும்
வெறுத்துக் கண்ணன் திருவருளாற் பேரின்பம் பெற்றவன். (15(பா),56)

கேசி:- கஞ்சனுடைய நண்பன் இவன்; அசுர குலத்தினன் கஞ்சனேவலாற்
குதிரையாகிக் கோகுலம் அடைந்து கோவலரை வருத்தித் திரிந்தான்: கண்ணன்
தன்னைக் கொல்ல வந்தவன் என்பதையறிந்து தன் சிறு கையை வாய்க்குள் விட்டுப்
பெரிதாக்கி வாயைப் பிளந்து கொன்றான். (686)

கோசலை:- கோசல நாட்டு மன்னன் மகள்; தசரதனுடைய முதல் மனைவி;
இராமனைப் பெற்ற தாய். (668)

சங்கசூடன்:- இவன் கண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆயமகளிரைக்
கவர்ந்து சென்றவன்; அதனையறிந்து கண்ணன் இவனைக் கொன்றான். கொன்று
அவன் வைத்திருந்த தலை மணியையும் கைப்பற்றினன். (685)

சத்தியபாமை:- சத்திராசித்துவின் மகள் ; கண்ணன் மனைவி; சததனுவா, தன்
தந்தையைக் கொன்றதைத் தன் கணவனுக்குக் கூறி அச்சததனுவாவைக்
கொல்வித்தவள்; இந்திராணி தன்னை இகழ்ந்ததற்காகக் கண்ணன் பால் ஊடிப்
பாரிசாதம் என்ற தருவைத் தன் மனைக்குக் கொண்டுவரச் செய்தவள்.
நரகாசுரனுடன் கண்ணன் போர் புரியும்போது வேண்டிய உதவி புரிந்தவள். (378, 695)

சத்தியை:- நப்பின்னை என்ற பெயரும் இவளுக்குரியது; இவள் நக்கினசித்து
என்பவன் புதல்வி; இவள் தந்தை ஏழ் விடையை வளர்த்து அவற்றைத்
தழுவியவர்க்கே இவளைக் கொடுப்பதெனக் கூறினன். அவ்வேழ்விடைகளையும்
தழுவி இவளை மணந்தான் கண்ணன்; அவன் மனைவியரில் இவள் ஒருத்தி. (698)