தொகுப்பாசிரியர் உரை:
கவிஞர் தமிழ் ஒளி (1924-65) நாற்பதாண்டுக் காலம் தமிழ் மண்ணில்
வாழ்ந்து மறைந்த பெருங்கவிஞர்.
வரும் செப்டம்பர் 21ம் நாள் அவருக்கு 80 ஆம் ஆண்டு பிறந்த நாள்.
புதுச்சேரி அவருக்குச் சொந்த ஊர். பாவேந்தர் பாரதிதாசனார்
அவருக்கு ஆசான்.
மாணவப் பருவத்தில் திராவிட மாணவர் கழகத்திலும், பின்னர்
இந்தியப் பொதுவுடை இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டு புரட்சிகரமான
கவிதைகளைப் படைத்தவர்.
குறிப்பாக, 'மே தினம்' பற்றிய அவருடைய கவிதை தமிழ்
இலக்கியத்திற்கோர் புதுமை!
1954இல் அரசியல் தொடர்புகளினின்றும் முற்றாக விலகித், தனித்து
வாழ்ந்து காவியம் படைப்பதில் கவனம் செலுத்தியவர். அந்தக் கால கட்டத்தில்
என்னுடன் நட்புக் கொண்டவர்.
‘விதியோ, வீணையோ?’ இசை நாடகம்;
‘கண்ணப்பன் கிளிகள்’ உருவகக் காப்பியம்;
‘மாதவி காவியம்’; தனிச் சிறப்புமிக்கது
‘புத்தர் காவியம்’ முற்றுப்பெறாதது -
இவை பெருமைக்குரிய
அவரது பிற்காலப் படைப்புகள்.
புரட்சிக் கருத்துகளையும், புதுமையான சந்த வடிவங்களையும் மரபுக்
கவிதைகளில் படைத்து, கவிதை இலக்கியத்திற்குப் புதிய பொலிவினைச் சேர்த்தவர்
தமிழ் ஒளி.
முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இம்மா கவிஞர், தமது
வாழ்நாளில் எவ்விதச் சிறப்பினையும் எய்தாமல்
தடுக்கப்பட்டவர்.
‘காலத்தால் நிழலடிக்கப்பட்ட கவிஞர்’ என இலக்கிய வாணர்கள்
இப்போது கூறுவதை நம்மால் கேட்க முடிகிறது.
கவிஞர் மறைவுக்குப் பின்னர், அவருடைய தந்தையிடம் அனுமதி
பெற்று 1966இவ் கவிதை நூல்களை நான் வெளியிட்டேன்.
அவற்றைப் பார்வையிட்ட முதுபெரும் தமிழறிஞர்கள் டாக்டர்
மு. வரதராசனார் பன்மொழிப்புலவர்
கா. அப்பாத்துரையார் வாழ்த்துரை
வழங்கிக் கவிஞருக்குப் பெருமை சேர்த்தனர். |