கவிஞரின் உள்ளம் இயற்கை யழகிலும் ஈடுபட்டது; செயற்கை
முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்டது. இளவேனில், தாமரை, மழை, 
புயல், மின்மினி, நிலா, விண்மீன் முதலியன பற்றி அவர் பாடிய பாடல்கள் 
நம் உள்ளத்தைத் தொடுவன. ரோஜா மலர், தன் முள்ளின் காவலைக் கடந்து 
காதல் வாழ்வு பெறும் தன்மை கற்பனை வளம் பெறத் தீட்டப்பட்டிருக்கிறது.
‘பட்ட மரம்’ பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிறது. ‘நெய்வேலிக்
கரி’யும் ‘அணு’வும் வளரும் அறிவியலை வரவேற்கும் கவிஞரின் 
மனப்பான்மைக்குச் சான்றுகள். ‘சேரன் கூத்து’ம் ‘வள்ளைப் பாட்டு’ம் 
தமிழிலக்கிய மரபில் அவர்க்கு இருந்த ஈடுபாட்டை உணர்த்துவன. 
‘எண்ணம்’, ‘வேண்டும் வரம்’, ‘கவிஞன்’ என்னும் பாடல்கள் அவருடைய 
உயர்ந்த மனப்பான்மையை விளக்குவன. ‘எண்ணித் துணிந்தேன்’ 
எனும் கவிதை, உலக அறிஞர்க்கும் கலைஞர்க்கும் கூறப்படும் ஒப்பற்ற 
அனுபவ அறிவுரையாகத் திகழ்கிறது.
  “மண்ணில் முளைத்தவன் நான் - அதன்
       மார்பில் திளைத்தவன் நான்!
எண்ணித் துணிந்து விட்டேன் - இனி
       எங்கும் பறந்து செல்லேன்!”

என்பது உண்மை; பெரிய உண்மை. அந்த உண்மை கவிஞர் வாயில்
வெளிப்படும்போது எவ்வளவு தெளிவாக, எவ்வளவு செம்மையாக 
விளக்கமாகிறது! கவிஞர் தமிழ்ஒளி தமிழ் வானத்தில் விளங்கிய 
ஒரு விண்மீன்! அதன் மங்காத கவிதை ஒளியைப் போற்றுவோமாக!

சென்னை - 30 
29.6.1966

மு.வரதராசன்