மாமன் பெருமை
|
ஆறு வண்டி நூறு சட்டம்
அம்பத் தெட்டு குத்துக் காலாம்
குத்துக்கால் பண்ணினவன்
கொல்லி மலைத் தட்டானாம்
அம்பக்கால் பண்ணினவன்
அரியமலை தட்டானாம்
மானத்திலே பூப்பரிச்சு
மந்தையிலே தேர் சோடிச்சி
தேரும் திரும்புதையா
தேவாதிங்க கையெடுங்க
கூனர் குருட ரெல்லாம்
கோல் போட்டு ஏறு மலை
சப்பாணி தாத ரெல்லாம்
தவுந் தேறும் பொன்னு மலை
தீத்த மலை நதி யளகும்
திருணமலை ஜனத்தழகும்
மதுரையிலே அம்மானாம்-கண்ணே
மாலை கோக்கும் தட்டானாம்
மாசிப் பெரையோ நீ-நான் பெத்த
தவுந்து எழும் சூரியனே
சேலத்தான் சந்தையிலே என் கண்ணே
சித்தாடை விக்குதடா
சித்தாடை வெலை மதிக்கும்
சேனை பேர் அம்மானாம்
பட்டணத்தான் சந்தையிலே
பட்டு வந்து விக்குதடா
பட்டு விலை மதிக்க
பத்து பேர் அம்மானாம்
நாகம் கொடை பிடிக்க-கண்ணே
நல் பாம்பு தாலாட்ட
வெள்ளி வட தேராம்-உனக்கு
வெப்பாலம்-பூந் தேராம்
கள்ளிக் கடைத் தேராம்
கத்தாளைப் பூந் தேராம்
அஞ்சிமலைக் கொஞ்சி வர-உனக்கு
அழகுமலைத் தேரோட
கண்ணே மலையழகா
கண்மணியே நீ உறங்கு |
குறிப்பு:
அம்மான்-வன்னியன்,
தட்டான், சித்தாடை விலை மதிக்கும் அம்மான் என பலபேர் மாமன் முறையாக வருணிக்கப் படுகிறார்கள்.
குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பவர்கள், சமூக உறவுடையவர்கள்.
|