இவை நல்ல தமிழ் எழுதத் தம்மளவில் பாடுபட்ட அறிஞர்களின் வேதனைக்
குமுறல்கள். மலிந்துவிட்ட தவறுகளைக்கண்டு மனம் வேதனைப்பட்டால்
மட்டும் போதாது; அக்குறைகள் நீங்கத் தனிப்பட்ட முறையில் ஏதாவது
செய்யவேண்டும் என்று விரும்பியதின் செயல் வடிவே இச்சிறுநூல்.

 

தொல்காப்பியனும் பவணந்தியும் கடைப்பிடித்த முறை ஒழுங்கைப்
பின்வந்த எல்லாரும் மாற்றியதுடன், எளிமையாக இருக்கும் எனக் கருதி,
வேறுவேறு வகையாக விதிகளைத் தொகுத்து எழுதியுள்ளார்கள் (தமிழ்ப்
பாதுகாப்புக் கழக வெளியீடாகிய தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு எனும்
நூலைத்தவிர). நான் மீண்டும் தொல்காப்பியன் சொன்ன முறைக்குத்
தாவியுள்ளேன். எனது முயற்சி மிகமிகக் குறைவுதான். அதாவது
அகர இறுதி, ஆகார இறுதி என நிலைமொழிச் சொற்களின் ஈற்றெழுத்தைக்
கொண்டு அடையாளங் கண்டு விளக்கம் காண்பது. இம்முறையே அறிவியல்
பார்வையுடைத்து (scientific approach), எளிமையுடைத்து எனக்
கருதுகின்றேன். இது மட்டுமே என் பங்கு! அதுவும் சரியன்று! சரியாகச்
சொல்ல வேண்டுமானால் தொல்காப்பிய நெறி! உடனடியாக ஐயங்களைக்
களைந்துகொள்ள இதுவே கற்போர்க்கு எளிய நெறியாகும்.

இதன்கண் தமிழ்மொழி எழுதுதலில் உண்டாகும் எல்லாத்
தவறுகளையும் களைவதற்கு வழிகாட்டப் படவில்லை. குறிப்பாகக் க, ச, த, ப
வருக்க எழுத்துக்கள் வருமொழியாகும்போது ஒற்றெழுத்து மிகுமா மிகாதா
என்பதற்கு மட்டுமேவழிகாட்டப்பட்டுள்ளது. மிகு தலையும் மிகாமையையும்
புரிந்துகொள்ளப் பெயரெச்சம், வினையெச்சம், குற்றியலுகரம், வேற்றுமைகள்,
ஏவல், விளி போன்றவற்றின் விளக்கங்களை அறிந்திருக்க வேண்டியது