பக்கம் எண்: - 44 -

ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்களுக்குள்ளும் சிற்றரசர்களுக்குள்ளும் அடிக்கடி பூசல்களும் போர்களும் நிகழ்ந்தது உண்டு. அவ்வப்போது புலவர்கள் தலையிட்டுப் பூசல்களையும் போர்களையும் தடுத்து அமைதி ஏற்படுத்தியதும் உண்டு. அதியமான் என்ற அரசனுக்காக அவ்வையார் என்ற புலவர் தூதுசென்று தொண்டைமான் என்ற அரசனிடம் அஞ்சாமல் திறமையாகப் பேசினார். பேகன் என்ற தலைவனுடைய குடும்ப வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டபோது, அவனுடைய மனைவிக்காகப் பரிந்து அரிசில்கிழார், கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார் ஆகிய புலவர்கள் வேண்டிக்கொண்டு பாடிய பாட்டுகள் புறநானூற்றில் உள்ளன. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மக்களுக்கும் பகைமை ஏற்பட்டபோது, அது போராக மூளாதபடி தடுத்தவர் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார்.  அந்தச் சோழனுக்கு உயிர் நண்பராக விளங்கியவர் புலவர் பிசிராந்தையார். பண்ணன் என்ற ஒரு வள்ளலையும் அவனுடைய அருஞ்செயலையும் சோழவேந்தன் கிள்ளிவளவன் பாராட்டிப் பாடியுள்ளான். பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் வேந்தன், தன் பகைவர்மேல் பெருஞ்சினம் கொண்டு சூள் உரைத்ததாக உள்ள பாட்டு ஒன்றில், “என் பகைவர்களை நான் போரில் முறியடிக்காவிட்டால், மாங்குடி மருதன் முதலான சிறப்புடைய புலவர்கள் என் நாட்டைப் பாடாமல் நீங்கும் தாழ்வு அடைவேனாக” என்று கூறியுள்ளான். போர்க் களத்திற்கு வெகுண்டெழும்போது நினைந்துபோற்றும் அளவிற்கு வேந்தர்களின் நெஞ்சில் புலவர்களைப்பற்றிய மதிப்பு விளங்கியது. பாரி என்ற ஒரு மலைநாட்டுத் தலைவனுடைய வாழ்வோடு தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவர் கபிலர் என்ற பெரும்புலவர். அந்த வள்ளல் மாண்டபிறகு அவனுடைய மக்களுக்கு உதவியாகச் சிலகாலம் வாழ்ந்து பிறகு கபிலரும் தம் வாழ்வை முடித்துக் கொண்டார். சோழர் குடும்பத்தில் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே பகை மூண்டபோது அதைக் களையப் பாடுபட்டவர் புலவர் கோவூர்கிழார். மலையமான் என்ற தலைவன் இறந்தபிறகு, அவனுடைய மக்களைக் கொல்ல ஒரு சோழன் முனைந்தபோது அவர்களைக் காக்க கோவூர்கிழார் பாடிய பாட்டும், புலவர் ஒருவரைப் பகைவரின் ஒற்றனாக வந்தவர் என்று தவறாகக் கருதிச் சோழன் அவரைக் கொல்லத் துணிந்தபோது அந்தக் கோவூர்கிழார் பாடியபாட்டும் உள்ளத்தைத் தொடும் உணர்ச்சி வாய்ந்தவை. தமிழ் வேந்தர்கள் வீரம் நிறைந்தவர்களாக, போருக்கு அஞ்சாதவர்களாக விளங்கியதுபோலவே, அன்பு நிரம்பியவர்களாகவும் நீதிக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் விளங்கியதும் காண்கிறோம். அவர்களிடம் புலவர்களுக்குப் பெருஞ் செல்வாக்கு இருந்தது. புலவர்களின் அறிவுரைக்கும் அறவுரைக்கும் அவர்கள் செவிகொடுத்துப் பணிந்திருக்கிறார்கள். அதனாலேயே, இன்றும் பாராட்டத்தக்க சிறந்த பாட்டுகள் அக்காலத்தில் தோன்ற முடிந்தது.