சைவம், வைணவம்,
சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் அக்காலத்தில் இருந்தபோதிலும், இலக்கியத்தில்
அவை செல்வாக்கான இடம் பெறவில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரையில், சமய வேறுபாட்டைக்
கடந்த வாழ்க்கையின் இன்ப துன்ப உணர்ச்சிகளே இடம் பெற்றிருந்தன. பாணர், விறலியர்,
கூத்தர், பொருநர் என்னும் ஆடல் பாடல் கலைஞர்கள் நாடு முழுதும் பரவியிருந்தனர். மக்களிடத்திலும்
அவர்களின் கலைகளுக்கு ஆதரவு இருந்தது. அரசர்களின் அரண்மனைகளிலும் ஆதரவு இருந்தது.
சங்க இலக்கியத்தில் அவர்களைப்பற்றிய குறிப்புகள் பல உள்ளன.
அரசருள் புலவர்
நெடுஞ்செழியன் என்னும்
பாண்டிய அரசன் கல்வியின் சிறப்பைப்பற்றி ஒரு பாடல் பாடியுள்ளான். “வேண்டிய
உதவிகள் செய்தும், மிகுதியாகப் பொருள் கொடுத்தும் எவ்வாறேனும் கல்வி கற்பது நல்லது;
பணிந்து பின்நிற்பதைப்பற்றி வெறுப்புக் கொள்ளாமல் கற்றோரை அணுகி வணங்கிக் கற்றுக்கொள்ள
வேண்டும். ஒரே தன்மையான பிறப்பை உடைய சகோதரர்க்குள்ளும், கல்வியின் சிறப்புக்
காரணமாகப் பெற்ற தாயும் மனம் மாறுவாள். ஒரே குடும்பத்தில் பிறந்த மூத்தவனை வரவேற்காமல்
அறிவுடையவன் இளையவன் ஆயினும் அவனையே அரசு விரும்பும். கீழான குடும்பத்தில் பிறந்த
ஒருவன் கல்வியறிவால் சிறந்து விளங்கினால், மேலான குடும்பத்தில் பிறந்தவனும் அவனுக்குப்
பணிந்து போவான்” என்று அந்தப் பாண்டிய மன்னன் அப் பாட்டில் கூறியுள்ளான்.
கோப்பெருஞ்சோழன்
என்னும் சோழமன்னன் தன் இறுதிக்காலத்தில் பாடிய பாட்டுகள் நெஞ்சை உருக்கும் உணர்ச்சியுள்ளவை.
ஊரின் வடக்கே சென்று உண்ணா நோன்பு மேற்கொண்டு அம் மன்னன் உயிர் நீத்தான்.
உண்ணா நோன்பு கிடந்தபோது அவன் இயற்றிய பாட்டுகள் உருக்கமானவை. அவனுக்கு நெருங்கிய
நண்பராக இருந்த பிசிராந்தையார் என்னும் புலவரை அப்போது மன்னன் நினைத்துக்கொண்டான்.
“என்னை உயிராகக் கொண்டு போற்றும் புலவர் பிசிராந்தையார். அவர் யான்
நாடாளும் வேந்தனாகச் செல்வத்தில் புரண்ட காலத்தில் வாராமல் நின்றாலும், இப்போது
துன்புறும்போது வரத் தவறமாட்டார். அவரைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆயின. ஆயினும்
எங்கள் இருவர்க்குள் இருந்த நட்பு மிகச் சிறந்தது. சில வேளைகளில் அவர் தம் பெயரை
மறந்து என் பெயரைச் சொல்வதும் உண்டு. அப்படிப்பட்ட உரிமையான நட்பு உடையவர் அவர்.
இப்போது
|